தலைமை நீதிபதி தஹில் ரமானி இடமாற்றம்: 80,000 தமிழக வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு

தலைமை நீதிபதி தஹில் ரமானி இடமாற்றம்: 80,000 தமிழக வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு

2 mins read
850461a5-aeff-4ea0-8270-79b033c4e629
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்த தஹில் ரமானியை, மேகாலயா உயர் நீதிமன்றத்திற்கு மாற்றி கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி உச்சநீதிமன்ற  தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான கொலிஜியம் பரிந்துரை செய்தது. இதனால் அதிருப்தி அடைந்த நீதிபதி தஹில்ரமானி தனது தலைமை நீதிபதி பதவியிலிருந்து விலகியுள்ளார். -

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இடமாற்றம் செய்யப்பட்ட விவகாரம் விசுவரூபம் எடுத்துள்ளது. தமிழகத்திலும் புதுச்சேரியிலும் இன்று 80,000க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபடவிருக்கின்றனர்.

இது தொடர்பாக கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக் குழு தலைவர் நந்தகுமார், "சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி வி.கே.தஹில் ரமானியை மேகாலயா உயர்நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்து உச்ச நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது. இது ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல. உச்ச நீதிமன்ற பரிந்துரையை அதிபர் ஏற்றுக்கொள்ளக் கூடாது. அவரை தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியாற்ற அனுமதிக்க வேண்டும். இதே போல தனது பதவி விலகலை தலைமை நீதிபதி தஹில் ரமானி மறுபரிசீலனை செய்ய வேண்டும்," என்றார்.

"சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இடமாற்றம் செய்வது ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை. இது, வழக்கறிஞர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

"எனவே தலைமை நீதிபதி தஹில் ரமானியை சென்னையிலேயே பணியாற்ற உத்தரவிட வலியுறுத்தி தமிழகம், புதுச்சேரியில் உள்ள நீதிமன்றங்களில் பணியாற்றும் வழக்கறிஞர்கள் இன்று நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவார்கள். இதில் சுமார் 80,000 வழக்கறிஞர்கள் பங்கேற்பார்கள்," என்று திரு நந்தகுமார் நேற்று தெரிவித்தார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மரபுகளுக்கு மாறாக மாற்றப்பட்டுள்ளார் என்று குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானியை, மேகாலயா உயர் நீதிமன்றத்திற்கு மாற்றி கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான கொலிஜியம் பரிந்துரை செய்தது. இதனால் அதிருப்தி அடைந்த நீதிபதி தஹில்ரமானி தனது தலைமை நீதிபதி பதவியிலிருந்து விலகியுள்ளார்.