பின்லாந்திலிருந்து 30 ஆசிரியர்களைக் கொண்ட குழு தமிழகம் வருகிறது

பின்லாந்திலிருந்து 30 ஆசிரியர்களைக் கொண்ட குழு தமிழகம் வருகிறது

2 mins read
c0151850-0ff6-4933-998e-799648e848d7
தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன். படம்: ஊடகம் -

சென்னை: தமிழகத்தின் பள்ளிக்கூட ஆசிரியர்களுக்கு பின்லாந்து ஆசிரியர்கள் பயிற்சி அளிக்க இருக்கிறார்கள். பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தமிழக ஊடகம் ஒன்றுக்கு அளித்த சிறப்புப் பேட்டியில் இதனைத் தெரிவித்தார்.

அவர் கூறுகையில், "பின்லாந்து நாட்டின் கல்வி முறைகளைப் பார்வையிட்டு, தமிழக பள்ளி கல்வித் துறை மூலமாக என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்பதை ஆய்வு செய்வதற்காக அந்த நாட்டுக்குச் சென்றிருந்தோம்.

"பின்லாந்து நாட்டின் மக்கள் தொகை 55 லட்சம். இவர்களில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவு. (தமிழகத்தின் 7.5 கோடி மக்கள் தொகையில் 1.32 கோடி பேர் மாணவர்கள்).

"மாணவர் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் மருத்துவம், பொறியியல் போன்ற துறைகளை விருப்பத்தின்பேரில் அவர்களே தேர்வு செய்துகொள்கின்றனர். விருப்பத்துடன் தேர்வு செய்வதால் அந்தப் பாடங்களை நன்றாகக் கற்கின்றனர்.

"9ஆம் வகுப்பில் மருத்துவப் பயிற்சி பெற்ற ஒருவர் அடுத்தடுத்த படிப்பையும் கற்று, 18 வயதில் மருத்துவருக்கு முந்தைய நிலையை அடைந்து விடுகிறார். அவருக்கு அதற்கான சான்றிதழ் தரப்படுகிறது. தன் பிள்ளையைப் போல ஒவ்வொரு மாணவனையும் ஆசிரியர்கள் கவனிக்கின்றனர். எனவே கல்வியில் உலகில் முதலிடத்தை பின்லாந்துதான் பிடிக்கிறது.

"பின்லாந்தில் எல்லா பள்ளிகளிலும் ஒரே பாடத்திட்டம்தான் உள்ளது. அந்த நாட்டைப் பார்த்ததன் விளைவு என்னவென்றால், அங்கிருந்து தமிழகத்துக்கு 30 ஆசிரியர்களை வரவழைக்க இருக்கிறோம். அவர்கள் ஒரு மாதம் தங்கி இருந்து இங்குள்ள ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிப்பார்கள்.

"சென்னை, திருச்சி, மதுரை என 3 மண்டலங்களாகப் பிரித்து பயிற்சிகளை வழங்க இருக்கிறோம். கற்றுத்தரும் முறை பற்றி இந்த பயிற்சி இருக்கும்.

"அங்குள்ள பள்ளிகளை பின்லாந்து அரசே நடத்தி வருகிறது. பள்ளிக்கூட நடைமுறைகளின்படி பிரி-கேஜி, எல்கேஜி, யூகேஜி என்ற வரிசையில் வகுப்பறைகள் உள்ளன. அங்கிருந்தே வாழ்க்கைக்குத் தேவையான உடல் நலன், ஆரோக்கியம், வாழ்க்கை நடைமுறைகள், சுகாதாரம் கற்றுத் தரப்படுகிறது.

"மாணவனின் மனநிலைக்கு ஏற்ற கல்விகளை அளிக்கின்றனர். 6 வயதுக்குப் பிறகுதான் கல்வி கற்கத் தொடங்குகின்றனர். அதுவரை விளையாட்டுத்தான். 15ஆம் வயதில் 9ஆம் வகுப்புக்கு வரும்போது திறன் பயிற்சி அளிக்கின்றனர்," என்றார் செங்கோட்டையன்.