கடத்தப்பட்ட மகன் 20 ஆண்டுகளுக்குப் பிறகு பெற்றோர்களுடன் இணைகிறார்

இருபது ஆண்டுகளுக்கு முன்னர் கடத்தப்பட்ட தங்கள் மகனுடன் ஆனந்தக் கண்ணீர் நிரம்ப ஒன்று சேர்ந்துள்ளனர் சென்னையைச் சேர்ந்த இந்தத் தம்பதியர்.

நாகேஷ்வருக்கும்  சிவகாமிக்கும் பிறந்த அவினாஷ், கிட்டத்தட்ட மூன்று வயதாக இருந்தபோது திடீரென சென்னையின் புளியந்தோப்பு நகரில் ஆட்டோ ரிக்‌ஷாக்காரன் ஒருவனால் பெற்றோரிடமிருந்து பறிக்கப்பட்டார். அப்போது சுபாஷ் என்ற பெயருடைய அந்தச் சிறுவன், பின்னர் சென்னையில் சட்டவிரோதமான தத்தெடுப்புகளைச் செயல்படுத்தும் ‘மலேசியன் சோஷியல் சர்விஸ்’ (எம்எஸ்எஸ்) என்ற நிலையத்திற்கு அனுப்பப்பட்டான். அங்கிருந்து அவன் அமெரிக்காவுக்குத் தத்தெடுப்புக்காக அனுப்பப்பட்டான்.

எம்எஸ்எஸ் நிறுவனத்தின் மீது இந்தியாவின் மத்திய புலனாய்வுத் துறை விசாரணை நடத்தியபோது அவினாஷ் இருந்த இடம் கண்டுபிடிக்கப்பட்டது. 

அமெரிக்காவிலேயே வளர்ந்த அவினாஷுக்கு ஆங்கிலம் மட்டுமே தெரிந்ததால் அவர் தமது பெற்றோருடன் நேரடியாக உரையாட முடியாமல் உரைபெயர்ப்பு வழியாகப் பேசினார். இருந்தபோதும் தமக்குக் கிடைத்த நிம்மதி, சுகம், பழக்கப்பட்ட தன்மை உள்ளிட்ட உணர்ச்சிகளைப் பற்றி விவரிக்க வார்த்தைகளே இல்லை என்கிறார் அவினாஷ்.

பல்லாண்டுகளாக வாடிய பெற்றோர்கள்

கட்டடங்களுக்குச் சாயம் பூசுபவராகப் பணியாற்றுகிறார் நாகேஷ்வர். அவரது மனைவி சிவகாமி ஓர் இல்லத்தரசி. தங்களது மகன் இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அவனைக் காணவேண்டும் என்று அந்தத் தந்தையும் தாயும் துடியாய்த் துடித்தனர்.

நாகேஷ்வர் தான் தந்தை என்று சோதனைகளின் வழி உறுதி செய்யப்பட்டபோதும் அவினாஷ் 18 வயதை எட்டும்வரை அவனை அவரால் காண முடியவில்லை.

தான் தத்தெடுக்கப்பட்டதாக ஆரம்பத்திலிருந்தே தெரிந்ததாக அவினாஷ் தெரிவித்தார். “ என்னைச் சுற்றியிருந்தவர்கள் வெள்ளைக்காரர்களாக இருந்தனர். நான் யார் என்பதை அறிய எனக்கு சிறு வயதிலிருந்தே ஆவலாக இருந்தது,” என்று அவினாஷ் தெரிவித்தார்.

“எங்கிருந்து வந்தேன் என்பதை எந்நாளும் மறக்கக்கூடாது என்பது எனக்குச் சொல்லிக்கொடுக்கப்பட்டிருந்தது,” என்றும் அவர் கூறினார்.

தனது மனைவியின் நெடுநாள் மனவலிக்கு இந்தச் சந்திப்பு மருந்தாகிவிட்டதாகக் கூறுகிறார் நாகேஷ்வர்.

(தகவல்: The NEWS Minute)