ஜெயலலிதா சமாதியில் நடந்த திருமணம்

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையில் மகனின் திருமணத்தை நடத்த வேண்டும் என்ற தனது விருப்பம் நிறைவேறாமல் போனாலும் சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அவரது சமாதியில் திருமணத்தை நடத்தி ஆறுதல் தேடிக்கொண்டார் தீவிர அதிமுக விசுவாசி ஒருவர்.

சென்னை, சிந்தாமணியில் உள்ள கூட்டுறவு சிறப்பு அங்காடியின் இயக்குநரும் முன்னாள் எம்ஜிஆர் மன்ற மாவட்டச் செயலாளருமான எஸ்.பவானிசங்கரின் மகன் சதீஷ் என்ற சாம்பசிவராமனுக்கும் ஆர்.தீபிகாவிற்கும் நேற்று முன்தினம் ஜெயலலிதா சமாதியில் மேளதாளம், நாதசுவரம் முழங்க திருமணம் நடை பெற்றது.

திருமணத்தை நடத்திக் கொள்ள அதிமுக தலைமையும் ஒப்புதல் அளித்தது. அனைத்துலக எம்ஜிஆர் மன்றச் செயலாளர் அ.தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா உள்ளிட்ட பலரும் இவ்விழாவில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். ஜெயலலிதா சமாதியில் இதுபோன்ற மங்கல நிகழ்வுகள் இனி அடிக்கடி இடம்பெறலாம். படம்: பிடிஐ

Loading...
Load next