வைகோ மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். ஆனால் ஜம்மு காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பியபாடில்லை.

இந்த நிலையில் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவை கண்டுபிடித்து தரும்படி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உச்ச நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.

“சென்னையில் வரும் 15ஆம் தேதி நடைபெற உள்ள அண்ணா மாநாட்டுக்காக பரூக் அப்துல்லாவுக்கு அழைப்பு விடுக்க வேண்டும். ஆனால் அவர் எங்கு இருக்கிறார் என்பது தெரியவில்லை. எனவே, அவரை கண்டுபிடித்து தரவேண்டும்,” என மனுவில் வைகோ குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்கும்படி உச்ச நீதிமன்ற நீதிபதி ரமணா அமர்வில் வைகோ தரப்பில் நேற்று முறையிடப்பட்டது. ஆனால் வைகோவின் மனுவை அவசரமாக விசாரிக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.  மனுவை எப்போது விசாரிப்பது என்பதை தலைமை நீதிபதி முடிவு செய்வார் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

வைகோவின் அரசியல் சந்தர்ப்பவாதம்?

காஷ்மீர் குறித்து வைகோ இவ்வாறு வெளியிட்டு வரும் கடுமையான வாசகங்கள் காங்கிரஸ் கட்சியை அதிருப்தி அடையச் செய்துள்ளன. தமிழ்நாட்டில் காங்கிரஸுடன் கூட்டணியில் மதிமுக இணைந்த பட்சத்தில் அந்தக் கட்சியை வைகோ அடுக்கடுக்காக குறைகூறல்கள் வீசி வருகிறார். இவை யாவற்றுக்கும் சளைக்காத காங்கிரஸ், வைகோவை அரிசயல் சந்தர்ப்பவாதி என்றும் பச்சோந்தி என்றும் தாக்கிப்பேசியுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் இந்தக் கூட்டணியை வழிநடத்தும் திமுக எதுவும் கூறாமல் மெளனம் சாதிக்கிறது. ஆயினும், பிரிவினை வாத அரசியலின் தொடர்பில் நெடுநாளாகக் குரல்கொடுத்து வந்த திமுக, காஷ்மீர் இந்தியாவைவிட்டுப் பிரிவை விரும்புவதாகத் தெரிவித்துள்ளது. காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்துக்கான நீக்கத்தை ‘ஜனநாயகத்தின் கொலை’ என வர்ணித்துள்ள திமுக, அதே நேரத்தில் இந்தியாவின் ஒற்றுமையை ஆதரிப்பதாகவும் கூறியுள்ளது.