700 ஆண்டு தொன்மையான நடராஜர் சிலை மீட்பு

700 ஆண்டு தொன்மையான நடராஜர் சிலை மீட்பு

2 mins read
e4ab7a9c-60d8-4eec-b575-f90d2172fb69
(படம்: இந்திய ஊடகம்) -

சென்னை: திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் உள்ள கோயிலில் இருந்து 37 ஆண்டுகளுக்கு முன்பு திருடுபோன 700 ஆண்டு தொன்மையான குலசேகர முடையார் சிவன் கோயில் பஞ்சலோக நடராஜர் சிலையை சென்னை உயர்நீதிமன்ற சிறப்பு விசாரணைக் குழுவினர் மீட்டுள்ளனர். கல்லிடைக்குறிச்சியில் அருள்மிகு குலசேகரமுடையார் உடனுறை அறம்வளர்த்தநாயகி அம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயில் மன்னர் குலசேகர பாண்டியனால் 700 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப் பட்டது.

இந்தக் கோயிலில் இருந்த நடராஜர், சிவகாமி அம்மன், மாணிக்கவாசகர் மற்றும் திருவில்லி விநாயகர் சிலைகள் கடந்த 1982ஆம் ஆண்டு ஜூலை 5ஆம் தேதி திருடு போயின. இது தொடர்பாக கல்லிடைக்குறிச்சி போலிசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். ஆனால் இந்த வழக்கில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாததால் கடந்த 1984ஆம் ஆண்டு வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

இந்த நிலையில் சிலைக் கடத்தல் தொடர்பாக விசாரிக்கும் உயர் நீதிமன்ற சிறப்பு விசாரணைக் குழுத் தலைவர் பொன் மாணிக்கவேல் தலைமையில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜாராம், துணைக் கண்காணிப்பாளர் மலைச்சாமி ஆகியோர் கொண்ட அதிகாரிகள் இந்த வழக்கை மீண்டும் எடுத்து விசாரித்தனர். அதில், திருடப்பட்ட நடராஜர் சிலை ஆஸ்திரேலியாவின் அடிலைட் நகரில் உள்ள ஏஜிஎஸ்ஏ அருங்காட்சியகத்தில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து ஆதாரங்களை காட்டி ஆஸ்திரேலியா அரசிடம் நிரூபிக்கப்பட்டது.

பின்னர் இந்தியத் தூதரக அதிகாரிகள் உதவியுடன் ஏஜிஎஸ்ஏ அருங்காட்சியக அதிகாரிகளிடம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் அச்சிலையை ஒப்படைக்க அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

இந்த நடராஜர் சிலையின் தற்போதைய மதிப்பு ரூ. 30 கோடி. இந்தச் சிலை டெல்லிக்கு கொண்டு வரப்பட்டு அங்கிருந்து ரயில் மூலம் சென்னைக்கு இன்று காலை கொண்டு வரப்படவுள்ளது.