தாரமாக, தாயாக வாழ்ந்தவர் இப்போது கோயிலில் இருக்கும் குலதெய்வம்

சென்னை: தாம்பரத்தை அடுத்த எருமையூர் கிராமத்தை பூர்வீகமாகக் கொண்டவர் ரவி. சென்னை மாநகராட்சியில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ரேணுகா கடந்த 2006ம் ஆண்டு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் இறந்துவிட்டார்.
மனைவியை விட்டு ஒரு நாளும் பிரியாத ரவி ரேணுகாவின் இறப்பை மறக்க துன்பப்பட்டார். சொந்த வீடு கட்ட வேண்டும் என்று மனைவியின் ஆசையை அவரது மரணம் வரை ரவியால் நிறைவேற்ற இயலவில்லை. இப்போது மனைவிக்காக 9 அடி நீளம் 9 அடி அகலத்தில் 16 அடி உயரத்தில் கோயில் ஒன்றை ரவி எழுப்பி உள்ளார். 

‘ரேணுகா அம்மாள் திருக்கோயில்’ என்று அதற்கு பெயர் சூட்டியுள்ளார். மனைவியின் உருவத்தை பளிங்குக் கல்லால் செதுக்கி சிலையாக்கி கோயிலினுள் வைத்து தினமும் வணங்கி வருகிறார் ரவி. மேலும் தமது கைக்கடிகாரம், மோதிரம் ஆகியவற்றில் மனைவி ரேணுகாவின் உருவத்தைப் பொறித்துள்ளார். அவரது  சட்டைப் பையில் எந்நேரமும் மனைவியின் படம் இருக்கிறது. ரவி-ரேணுகா தம்பதிக்கு விஜய், சதீஷ் என்னும் இரு மகன்கள். அவர்களும் அன்றாடம் தங்களது தாயை கோயிலில் வணங்கி வருகின்றனர்.

“மனைவி உயிருடன் இருந்தபோது அவ்வப்போது சண்டையிட்டாலும் ஒரு மணி நேரத்தில் சமாதானம் ஆகி சகஜ நிலைக்கு வந்துவிடுவோம். ஆனால் இன்று அவர் இல்லாத நிலையில் நானும் இறந்திருப்பேன். இரண்டு மகன்களின் நலன் கருதி நான் வாழ்ந்து வருகிறேன்” என்று கண்களில் கண்ணீர் கொப்பளிக்க செய்தியாளரிடம் ரவி கூறினார். “தாரமாகவும் தாயாகவும் பாசம் காட்டிய ரேணுகா இப்போது எங்களது குலதெய்வமாக மாறிவிட்டார்,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.