தந்தைக்கு மகன் கடிதம்: 74ஐ 56 தடுக்கமுடியாது

தந்தைக்கு மகன் கடிதம்: 74ஐ 56 தடுக்கமுடியாது

2 mins read
e0ca4756-1904-4deb-befa-53083825a8e1
முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரம், அவரின் புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினரு மான கார்த்தி சிதம்பரம். படம்: ஊடகம் -

சென்னை: இந்தியாவின் முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரத்தின் 74வது பிறந்தநாளை முன்னிட்டு அவரின் புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கார்த்தி இரண்டு பக்க கடிதம் ஒன்றை நேற்று தந்தைக்கு அனுப்பினார்.

"உங்களுக்கு 74 வயதாகிறது. உங்களை 56 தடுத்து நிறுத்திவிட முடியாது," என்று கடிதத்தில் கார்த்தி குறிப்பிட்டு உள்ளார்.

பிரதமர் மோடி, 2014ல் நடந்த தேர்தல் பிரசாரத்தின்போது பாஜக ஆட்சிக்கு வந்தால் பாகிஸ்தான் அத்துமீறலில் ஈடுபடாது என்றும் 56 அங்குல அகல மார்பு உள்ள தான் இதை துணிச்சலுடன் கூறு வதாகவும் தெரிவித்து இருந்தார்.

அவருடைய மார்பின் அளவைக் குறிப்பிட்டே இப்போது கார்த்தி தனது கடிதத்தில் 56, 74ஐ தடுத்து விட முடியாது என்று தெரிவித்து இருக்கிறார்.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைதுசெய்யப்பட்டு திகார் சிறையில் ப. சிதம்பரம் அடைக்கப்பட்டு உள்ளார். "இன்று உங்களுக்கு 74 வயதாகிறது. நீங்கள் உங்கள் பிறந்தநாளை எப்போதுமே மிகப் பெரிய கொண்டாட்டமாக நடத்தியது கிடையாது. ஆனால் நாட்டில் இப்போது நிலைமை அப்படி இல்லை.

"சின்ன சின்ன நிகழ்ச்சிகள், சம்பவங்களுக்குக்கூட பெரிய கொண்டாட்டங்கள் நடக்கின்றன. நீங்கள் எங்களுடன் இப்போது இல்லாதது வருத்தத்தைத் தருகிறது. நீங்கள் எப்போது வீடு திரும்புகிறீர்களோ அன்று கேக் வெட்டி பிறந்த நாளைக் கொண்டாடுவோம்," என்று கடிதத்தில் கார்த்தி தெரிவித்து இருக்கிறார்.

இங்கிலாந்து நாடாளுமன்ற நிகழ்வுகள், அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ரஃபேல் நடால் கோப்பையை வென்று சாதனை படைத்தது, கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குப் பொருளியல் வளர்ச்சி 5% ஆக சரிந்ததை 100 நாள் நிறைவு செய்ததன் வெற்றியாக பாஜக கொண்டாடுவது;

சந்திரயான்-2 விண்கலம் திட்டம் தோல்வி அடைந்தபோது, இஸ்ரோ தலைவர் சிவனை கட்டி அணைத்து பிரதமர் மோடி ஆறுதல் சொன்னது நாடகம் என பல்வேறு செய்திகளை கடிதத்தில் அவர் வர்ணித்துள்ளார்.