சென்னைக்கு வளர்ச்சித் திட்டங்களை அறிவித்தார் முதல்வர் பழனிசாமி

சென்னைக்கு வளர்ச்சித் திட்டங்களை அறிவித்தார் முதல்வர் பழனிசாமி

2 mins read
e94ab01c-0ac4-4267-9601-88cf4306139e
திராவிட இயக்கத்தின் கோட்பாட்டாளருமான சி.என் அண்ணாதுரையின் 111வது பிறந்த நாள் நிகழ்ச்சியில் ஞாயிற்றுக்கிழமை இரவு கலந்துகொண்ட தமிழக முதல்வர் பழனிசாமி, சென்னை நகருக்கான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை அறிவித்தார்.  -

சென்னை: தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் குடிநீர் வளம் பெருகும் என்றும் நெரிசல் குறையும் என்றும் முதல்வர் பழனிசாமி உறுதிகூறி இருக்கிறார்.

சென்னையில் முன்னாள் முதல்வரும் திராவிட இயக்கத்தின் கோட்பாட்டாளருமான சி.என் அண்ணாதுரையின் 111வது பிறந்த நாள் நிகழ்ச்சியில் ஞாயிற்றுக்கிழமை இரவு கலந்துகொண்ட அவர், சென்னை நகருக்கான பல்வேறு திட்டங்களையும் அறிவித்தார்.

அன்றாடம் 400 மில்லியன் லிட்டர் கடல்நீரை குடிநீராக்கும் ரூ.6,078 கோடி செலவிலான திட்டம் தீட்டப்பட்டு இருப்பதாகவும் அந்தத் திட்டத்திற்கு அங்கீகாரம் வழங்கும்படி மத்திய அரசிடம் மனுசெய்து இருப்பதாகவும் முதல்வர் குறிப்பிட்டார்.

நெமிலியில் ரூ.1,259 கோடி மதிப்பிலான கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டு உள்ளது என்றும் இன்னும் ஒன்றரை ஆண்டுகளில் அந்தத் திட்டம் நிறைவேறியதும் சென்னை மாநகர் மக்களுக்குப் போதிய அளவுக்கு குடிநீர் கிடைக்கும் என்றும் முதல்வர் உறுதி கூறினார்.

இந்த திட்டங்கள் நிறைவேறும்போது பருவமழை பொய்த்தாலும் சென்னை நகர் மக்களுக்குத் தங்கு தடையின்றி குடிநீர் கிடைக்கும் என்றும் பழனிசாமி கூறினார்.

குடிநீர் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் ஒருபுறம் இருக்க, சென்னை நகர போக்குவரத்து நெரிசலைக் குறைத்து காற்றுத் தூய்மைக்கேட்டைப் போக்குவதற்காக பல்வேறு திட்டங்களை அரசாங்கம் எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

போக்குவரத்து நெரிசல் ஏற்படும் இடங்களில் எல்லாம் பாலம் கட்டும் பணி நடப்பதாகவும் முதல்வர் குறிப்பிட்டார்.

முதலீடு செய்ய உகந்த இடமாக தமிழ்நாடு இருப்பதால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இங்கு வருகிறார்கள் என்றும் இத்தகைய வருகையை மேலும் ஊக்குவித்து தமிழக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கே அமைச்சர்களின் வெளிநாட்டு பயணங்கள் இடம்பெறுவதாகவும் முதல்வர் கூறினார்.