கட்சி நிகழ்ச்சிகளில் உதயநிதி ஸ்டாலினுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுவதால் தவிக்கும் பிரபலங்கள்

கட்சி நிகழ்ச்சிகளில் உதயநிதி ஸ்டாலினுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுவதால் தவிக்கும் பிரபலங்கள்

2 mins read
5619d076-433a-4580-b585-239b6ff7975e
-

சென்னை: திமுகவில் உயர்மட்ட அளவில் பொருமல் நீடிப்பதை நேற்றைய சம்பவம் உணர்த்தியது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் அக்கட்சியின் இளைஞர் அணிச் செயலாளராக நியமிக்கப்பட்டது முதல் அவருக்கு அதிக அளவு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. கட்சியின் முன்னோடிகளும் நீண்ட நாட்களாகப் பணியாற்றி வருபவர்களும் பின்னுக்குத் தள்ளப்பட்டு வருவதாக குறைகூறல்கள் எழுந்து வரு கின்றன. மூத்த தலைவர்களை ஓரங்கட்டி உதயநிதியை பிரபலப்படுத்தும் முயற்சிகள் அதிகம் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், பெரியார் ஈவெ ராமசாமியின் 141வது பிறந்த நாளான நேற்று சென்னை சிம்சன் பகுதியில் உள்ள அவரது சிலைக்கு மு.க. ஸ்டாலின் மாலை அணி விக்கும் நிகழ்ச்சி திமுக சார்பில் பெரிய அளவில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறனும் அங்கு வந்திருந்தார். இருப்பினும் அந்த நிகழ்ச்சியில் உதயநிதிக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டது. தயாநிதியை திமுக தலைமை அவ்வளவாகக் கண்டுகொள்ள வில்லை என்று இணையச் செய்தி ஒன்று தெரிவித்தது.

நடப்பவற்றைக் கண்டு நொந்துபோன தயாநிதி மாறன் ஓரமாக நின்று இருந்ததை அங்கிருந்த திமுக பிரமுகர்கள் கவனித்தனர் என்றது அச்செய்தி.

'எல்லாம் உதயநிதியே' என்னும் போக்கால் திமுக தலைவர்கள் மத்தியில் அதிருப்தி நிலவுவதாக வும் அது குறிப்பிட்டது.

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் மனசாட்சியாக இருந்தவர் முரசொலி மாறன். அவர் மறைந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. மாறன் உயிருடன் இருந்தபோது திமுக தொடர்பான டெல்லி நடவடிக்கைகள் அனைத்தையும் அவர்தான் கவனித்துக்கொண்டார்.

அவருக்குப் பின் அவரது மகன் தயாநிதி மாறன் முழுநேர அரசியலுக்கு வந்து தந்தையைப் போல மத்திய அமைச்சராகவும் ஆனார்.

அண்மையில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தென்சென்னையில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.

அதையடுத்து கட்சியில் தமக்கு முக்கியத்துவம் கிடைக்கும் என்று எதிர்பார்த்த தயாநிதிக்கு ஏமாற்றமே மிஞ்சி வருகிறது.