சென்னை: நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ரவிக்குமார், கொங்கு மக்கள் தேசிய கட்சியின் சின்னராஜ், மதிமுக கணேசமூர்த்தி, இந்திய ஜனநாயகக் கட்சி பாரிவேந்தர் ஆகிய நால்வரும் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இவர்களின் வெற்றியை செல்லாது என அறிவிக்கக் கோரி தேசிய மக்கள் சக்தி கட்சித் தலைவர் எம்.எல். ரவி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். தேர்தல் விதிகளின்படி ஒரு கட்சியில் உறுப்பினராக உள்ள ஒருவர், அந்தக் கட்சியிலிருந்து விலகாமல் மற்றொரு கட்சியின் சின்னத்தில் போட்டி யிடுவது சட்டவிரோதமானது என ரவி தமது மனுவில் குறிப் பிட்டிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
கட்சியின் உறுப்பினராக இல்லாத ஒருவரை அந்தக் கட்சியின் சின்னத்தில் போட்டியிட அனுமதி அளித்தது தேர்தல் நடைமுறைகளை மோசடி செய்வது ஆகாதா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
தொடர்ந்து, உச்ச நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்புகளின் அடிப்படையில் தேர்தல் சீர்திருத்தம் தொடர்பாக பல்வேறு சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், இந்த மனுவுக்கு தேர்தல் ஆணையம், திமுக, அதிமுக மற்றும் அக்கட்சி சின்னங்களில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கூட்டணிக் கட்சி எம்.பி.க்கள் நவம்பர் 12ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டனர்.

