சென்னை: சென்னையை அடுத்த பேரூரில் ரூ. 6,078 கோடியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத் துக்கான நிதிக்கு தமிழக அரசு நிர்வாக ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தத் திட்டமானது ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு வங்கி நிதி யுதவியுடன் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான உத்தரவை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் ஹர்மந்தர் சிங் அண்மையில் வெளியிட்டார்.
"சென்னையை அடுத்த பேரூரில் நாளொன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் கடல்நீரை குடி நீராக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று சட்டப் பேரவையில் முதல்வர் கே.பழனிசாமி அறிவித்தார். இந்தத் திட்டத்துக்கான விரிவான திட்ட அறிக்கையை சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியமானது தமிழக அரசிடம் அளித்தது. இந்தத் திட்டமானது ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு வங்கியின் 85 விழுக்காடு நிதி யுடனும் தமிழக அரசின் 15% மானியத்துடனும் நிறைவேற்றப்பட உள்ளது. அதன்படி, ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு வங்கியானது ரூ.4,267.70 கோடியையும் தமிழ்நாடு உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி யமானது ரூ.749.60 கோடியையும் மாநில அரசின் நிதி ஆதாரத்தில் இருந்து ரூ.1,061.10 கோடி நிதியும் விடுவிக்கப்பட உள்ளதாக அந்த உத்தரவில் ஹர்மந்தர் சிங் தெரி வித்துள்ளார்.
பேரூர் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தைப் பொறுத்தவரையில் 20 ஆண்டுகளுக்கு பராமரிப்பு மற்றும் செயலாக்கச் செலவானது ரூ.20 ஆயிரத்து 174.14 கோடியாக உள்ளது. மேலும் நிலத்துக்கான 30 ஆண்டு கால குத்தகைத் தொகை ரூ.82 கோடியாகும். ஆண்டுக்கு சராசரியாக ரூ.1,000 கோடியை பேரூர் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்துக்கு மட்டும் செலவிட வேண்டிய நிலையுள்ளது.

