ராமநாதபுரம்: மதிமுகவின் ராமநாதபுரம் மாவட்ட இளைஞர் அணிச் செயலாளராக இருந்தவர் அரு.சுப்பிரமணியன். கடந்த மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ்
கனிக்கு ஆதரவாக சுப்பிரமணியன் செயல்படவில்லை என்றும் அமமுக வேட்பாளருக்கு ஆதரவாக செயல்பட்டார் என்றும் அவர் மீது புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து சுப்பிரமணியனிடம் வைகோவின் உதவியாளர் அருணகிரி இதுகுறித்து விசாரித்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து மதிமுகவில் இருந்து அரு.சுப்பிரமணியன் நீக்கப்படுவதாக அறிவிப்பு வெளியானது. அந்த அறிவிப்பை சுப்பிரமணியன் மகிழ்ச்சியுடன் வரவேற்று கொண்டாடியதோடு சுவரொட்டி அடித்து ஒட்டியுள்ளார். அதில், "கடனாளி ஆகாமல் தடுத்து என்னை கட்சியை விட்டு நீக்கிய வைகோவுக்கு நன்றி," என குறிப்பிட்டுள்ளார்.

