சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூருவில் சிறைவாசம் அனுபவித்து வரும் சசிகலா விடுதலை ஆனதும் அவரை அதிமுகவில் சேர்ப்பதற்கு ரகசியப் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்போது அரசியலில் செல்வாக்கை இழந்து நிற்கும் சசிகலா குடும்பத்தினர், மீண்டும் அதிகாரத்திற்கு வர விரும்புவதாகவும் இதன்தொடர்பில் அவர்கள் முதல்வர் பழனிசாமியின் ஆதரவாளர்களுடன் பேச்சு நடத்தி உள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.
தினகரனை விட்டுவிட்டு மற்றவர்களைக் கட்சியில் இணைத்துக்கொள்ளும்படியும் தங்களால் ஆட்சிக்கோ கட்சிக்கோ எந்தப் பிரச்சினையும் ஏற்படாது என்றும் சசிகலா தரப்பினர் முதல்வரிடம் கூறி உள்ளதாகத் தெரிகிறது.
இந்த விவரங்கள் சசிகலாவிடம் தெரிவிக்கப்பட்டு உள்ளன. நல்லநடத்தை காரணமாக இந்த ஆண்டே சசிகலா விடுதலை செய்யப்படலாம் என்று அவருடைய உறவினர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
சசிகலா விடுதலை ஆனதும் அவரை அதிமுகவில் சேர்த்து பொதுச் செயலாளர் பதவியை சசிகலாவுக்கு வழங்கும்படி உறவினர்கள் முதல்வரைக் கேட்டு உள்ளனர்.
சசிகலா பொதுச் செயலாளர் ஆன பிறகும் இப்போது இருப்பதைப்போன்று துணை முதல்வர் பன்னீர்செல்வம் கட்சியின் ஒருங்கிணைப்பாளராகவும் முதல்வர் பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளராகவும் தொடரலாம் என்றும் கூறப்பட்டு உள்ளது.
இதற்கு முதல்வர் தரப்பில் சம்மதம் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இருந்தாலும் சசிகலா மீண்டும் கட்சியில் இணைக்கப்படுவார் என்ற தகவல் அதிமுக தொண்டர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தி இருப்பதாகக் கூறப்படுகிறது.
மறுபடியும் சசிகலா அதிமுகவுக்கு வந்தால் அந்தக் கட்சி பிளவுபட்டுவிடும் என்றும் அதிமுகவைக் கைப்பற்ற மறுபடியும் முயற்சிகள் நடக்கும் என்றும் தொண்டர்கள் சிலர் கூறுகிறார்கள்.

