சென்னை: திமுக சின்னத்தில் போட்டியிட்டு நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற நான்கு பேரைத் தகுதி நீக்கம் செய்யவேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் 38 இடங்களிலும் புதுச்சேரியில் 1 இடத்திலும் திமுக கூட்டணி வென்றது. இதில் திமுகவின் உதய சூரியன் சின்னத்தில் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் சிலர் போட்டியிட்டு வெற்றிபெற்றனர். மதிமுக, விசிக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இஜக ஆகிய கட்சிகள் திமுகவின் சின்னத்தில் போட்டியிட்டு தேர்தலில் வெற்றிபெற்றன.
அந்த வெற்றியை அடுத்து கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சின்ராஜ், இந்திய ஜனநாயகக் கட்சி பாரிவேந்தர், மதிமுக கணேசமூர்த்தி, விடுதலைச் சிறுத்தைகள் ரவிக்குமார் ஆகியோர் நாடாளுமன்றத்திற்குச் சென்றார்கள்.
இவர்களின் எம்பி பதவியைப் பறிக்க வேண்டும் என்று இப்போது பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது. தேசிய மக்கள் சக்தி கட்சியைச் சேர்ந்த ரவி என்பவர் இது தொடர்பாக பொது நல வழக்கு தொடுத்துள்ளார்.
"தேர்தல் விதிகளின்படி ஒரு கட்சியில் இருக்கும் நபர் இன்னொரு கட்சிக்காக போட்டியிட முடியாது. இன்னொரு கட்சியின் சின்னத்தில் போட்டியிடுவதும் இதேபோலதான்.
"இவர்கள் நால்வரின் வெற்றி என்பது விதிக்கு எதிரானது. அதனால் இவர்களின் வெற்றியை உடனே ரத்து செய்ய வேண்டும்," என்று திரு ரவி வாதாடுகிறார்.
இதற்குப் பதில் அளித்த தேர்தல் ஆணையம், "நாங்கள் இவர்களின் மனுவைச் சரி பார்த்துதான் ஏற்றுக்கொண்டோம். அதனால் இதில் தவறில்லை. இதைத் தேர்தல் வழக்காக வேண்டுமானால் விசாரிக்கலாம். ஆனால் பொதுநல வழக்காக விசாரிக்கக்கூடாது. இதனால் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்," என்று வாதிட்டது.
இந்த நிலையில், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களும் விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அதேபோல் இது தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று திமுகவுக்கும் உச்ச நீதிமன்றம் சார்பாக கடிதம் அனுப்பப்பட்டு கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால் இந்த நால்வரின் பதவி குறித்து கேள்வி எழுந்துள்ளது. இருந்தாலும் தேர்தல் ஆணையத்தின் அனுமதியோடு அவர்கள் போட்டி யிட்டதன் காரணமாக இந்த வழக்கு வெற்றிபெறாது என்றும் கூறப்படு கிறது.

