சென்னை: டிக்டாக் செயலியில் தங்கள் நடன, நடிப்புத் திறமைகளை வெளிப்படுத்தும் காணொளிகளைப் பதிவேற்றிய 28 குடும்பப் பெண்கள், தாங்கள் பதிவேற்றிய காணொளிகள் ஆபாச இணையத்தளங்களில் பகிரப்பட்டதால் கதிகலங்கி இருக்கிறார்கள்.
டிக்டாக் செயலி குறித்தும் அதில் பதிவிடப்படும் காணொளிகள் குறித்தும் சமூக ஆர்வலர்கள் பலமுறை விரிவாக அவ்வப்போது எச்சரித்து வந்தாலும் அவற்றை எல்லாம் காதில் வாங்காத சில பெண்கள் டிக்டாக் செயலியில் அதிகமானவர்கள் தங்களை விரும்பவேண்டும் என்பதற்காக துப்பாட்டாவைக்கூட துறந்து காணொளி எடுத்து அதைப் பதிவேற்றினர். அந்தக் காணொளிகள் ஆபாச இணையத் தளங்களில் வலம் வருகின்றன.
சேலம் மாவட்டத்தில் மட்டும் 28 குடும்பப் பெண்களின் டிக்டாக் காணொளிகளைச் சமூக விரோதிகள் ஆபாச இணையத்தளங்களில் பதிவேற்றி இருப்பதாகத் தெரியவந்துள்ளது.
இதையறிந்த அந்தப் பெண்கள் போலிசை அணுகி உள்ளனர்.
ஆபாச இணையத்தளங்களில் இருந்து தங்கள் காணொளிகளை அகற்ற நடவடிக்கை எடுக்கும்படி அவர்கள் புகார் அளித்து வருகின்றனர். கடந்த சில நாட்களில் மட்டும் 28 புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
புகார் அளித்தவர்களின் பெயர்கள் ரகசியமாக வைக்கப்பட்டு உள்ளன. ஆபாச இணையத்தளங்களில் இருந்து அந்தக் காணொளிகள் நீக்கப்படுவதற்குச் சில நாட்கள் ஆகும் என்பதால், அந்தப் பெண்கள் பெருங்கவலையில் சிக்கித் தவிப்பதாகக் கூறப்படுகிறது.

