சென்னை: தமிழ்நாட்டில் நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்கும் சூழலில் அரசியல் கட்சிகள் பரபரப்பாக களத்தில் குதித்துவிட்டன.
அதிமுக, திமுக இரு கட்சிகளும் நீயா நானா என்ற போட்டியுடன் களத்தில் இறங்குவதாகத் தெரிகிறது. இரு கட்சிகளுமே நேற்று விருப்ப மனுக்களை விநியோகிக்கத் தொடங்கின.
அதிமுக சார்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மனோஜ் பாண்டியன், ஆர் லட்சுமணன் ஆகியோர் விருப்ப மனு தாக்கல் செய்ய இருந்தனர்.
இடைத்தேர்தல் நடக்கவிருக்கும் இரண்டு தொகுதிகளுமே திமுக கூட்டணி வசம் இருந்தவை. நாங்குநேரியில் வெற்றி பெற்றிருந்த காங்கிரஸ் கட்சி அங்கு மீண்டும் திமுக துணையுடன் களம் இறங்குகிறது.
விக்கிரவாண்டியில் திமுக உறுப்பினர் மரணம் அடைந்துவிட்டதால் இந்த இரண்டு தொகுதிகளையுமே கைப்பற்றவேண்டிய சூழ்நிலையில் திமுக கூட்டணி இருக்கிறது.
அதேவேளையில், ஏதாவது ஒரு தொகுதியைக் கைப்பற்றிவிட்டாலும் அது இப்போதைய சூழலில் பெரும் வெற்றியாக இருக்கும் என்று அதிமுக கணக்குப் போடுகிறது.
இந்நிலையில், நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று மக்கள் நீதி மய்யம் நேற்று அறிவித்தது. அமமுகவும் போட்டியில்லை என்று முன்னரே கூறியது.
அதேவேளையில், தமிழ் மாநில காங்கிரஸ், பாமக ஆகியவை தங்கள் ஆதரவு அதிமுகவுக்கு என்று நேற்று அறிவித்தன.
திமுக- காங்கிரஸ் அணிக்கு இந்திய கம்யூனிஸ்ட், கொமதேக ஆதரவு தெரிவித்தன.
இதனிடையே, தேமுதிக தலைமை கூறினால் இடைத்தேர்தலில் போட்டியிடத் தயார் என்று தேமுதிக தலைவரான விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் நேற்று செய்தியாளர்களிடம் கூறினார். இதனால் அதிமுக அணியில் இருந்து தேமுதிக விலகுமோ என்ற ஐயம் கிளம்பி உள்ளது.

