நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட மனு

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட மனு

1 mins read

சென்னை: நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர் மாதம் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இத்தொகுதிகளில் போட்டியிட பல கட்சிகளைச் சார்ந்த முக்கிய பிரமுகர்களும் தங்கள் கட்சியிடம் ஆர்வத்துடன் விருப்பமனுக்களைத் தாக்கல் செய்து வருகின்றனர்.

அதிமுக, திமுக, காங்கிரஸ் சார்பிலும் விருப்பமனுக்கள் வழங்கி வருகின்றனர்.

விக்கிரவாண்டி தொகுதிக்கு அதிமுக சார்பில் லட்சுமணன், வேலு, முத்தமிழ்ச்செல்வன், பன்னீர், வழக்கறிஞர் தம்பிதுரை ஆகியோர் விருப்ப மனு கொடுத்தனர்.

அமைச்சர் சி.வி.சண்முகத்தின் அண்ணன் ராதாகிருஷ்ணன் போட்டியிடலாம் என்றும் கூறப்படுகிறது.

பாமக தங்கள் கூட்டணியில் இருப்பதால் எப்படியும் இந்த தொகுதியை தங்கள் வசம் ஆக்கி விடலாம் என்று அதிமுகவினர் வரிந்து கட்டி களத்தில் இறங்கி உள்ளனர்.

விக்கிரவாண்டியில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட கள்ளக்குறிச்சி எம்.பி பொன்.கவுதம சிகாமணி விருப்பமனு அளித்தார்.

நாங்குநேரி தொகுதியில் போட்டியிட முன்னாள் எம்பி மனோஜ் பாண்டியனும் அதிமுக நட்சத்திரபேச்சாளரும் நடிகர் ஜஸ்டினின் மகளுமான பபிதாவும் விருப்ப மனு அளித்துள்ளார்.

நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட மூத்த தலைவர் குமரி அனந்தன் விருப்பமனு அளித்துள்ளார். காங்கிரஸ் கூட்டணி போட்டியிட எனக்கு வாய்ப்பு தந்தால் போட்டியிட தயார். வெற்றியும் உறுதி என்றார் அவர்.