சென்னை: பெரிய வங்கிகளுடன் சிறிய வங்கிகளை ஒன்றாக இணைப்பதைக் கைவிடவேண்டும் என்று வங்கி ஊழியர் சங்கங்கள் வலியுறுத்தின. இதை மத்திய அரசு காதில் போட்டுக்கொள்ளாததால் இப்போது வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 26, 27ஆம் தேதிகளில் இரு நாட்களுக்கு இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் வங்கி ஊழியர்கள் ஈடுபடுவதால் தமிழ்நாட்டில் சுமார் 20,000 ஏடிஎம் மையங்கள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
அந்த வகையில் நாடு முழுவதும் 2 லட்சத்து 12 ஆயிரம் ஏடிஎம்களில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இது நாடு முழுவதும் சுமார் ரூ.48,000 கோடி பணப் பரிவர்த்தனையைப் பாதிக்கும்.
கடந்த மாதம் 30ஆம் தேதி 10 பொதுத்துறை வங்கிகள் இணைக்கப்படுவதாகவும் அதன்படி 4 பெரிய வங்கிகளுடன் 6 சிறிய வங்கிகள் இணைக்கப்படும் என்றும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
இந்த இணைப்பு நடவடிக்கை காரணமாக நாட்டில் உள்ள பொதுத்துறை வங்கிகளின் எண்ணிக்கை 12ஆக குறைய உள்ளது.
இந்த நடவடிக்கைகளால் பொதுத்துறை வங்கிகள் அனைத்துலக தரத்துக்கு வலிமைபெறும், நிர்வாகச் செலவும் கணிசமாகக் குறையும். இதன் தொடர்ச்சியாக பொருளாதாரத்தை மேம்படுத்தமுடியும் என்று மத்திய அரசு கருதுகிறது.
ஆனால் இந்த வங்கிகள் இணைப்புக்கு அனைத்து இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வங்கி அதிகாரி கள் கூறுகையில், "வங்கிகள் இணைப்பால் நிறைய பேர் வேலை இழக்கும் அபாயம் ஏற்படும். நாளடைவில் இது தனியார்மயத்துக்கும் வழிவகுத்து விடும்" என்று தெரிவித்தனர்.
இந்நிலையில் தங்களது வாழ்க்கையைப் பாதுகாத்துக் கொள்ள வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் போராட்டம் முதல் கட்டமாக வரும் 25ஆம் தேதி நள்ளிரவு முதல் 27ஆம் தேதி நள்ளிரவு வரை வேலை நிறுத்தம் செய்யப்போவதாக வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
எனவே வரும் 26, 27ஆம் தேதிகளில் வங்கிச் சேவைகள் அனைத்தும் முடங்கும். வங்கிகள் திறக்கப்பட்டாலும் எந்த ஊழியரும் பணியில் ஈடுபடமாட்டார்கள்.
இது தமிழ்நாட்டில் ரூ.6 ஆயிரம் கோடி அளவுக்கு பண பரிவர்த்தனையைப் பாதிக்கும் என்று அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு நிர்வாகிகளில் ஒருவரான சேகரன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், "எங்கள் போராட்டத்தால் ஏ.டி.எம். சேவை பாதிக்கப்பட்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படக் கூடாது என்று நாங்கள் மனதார நினைக்கிறோம். ஆனால் மத்திய அரசு எங்கள் கோரிக்கைகளை ஏற்காமல் தன்னிச்சையாக முடிவு எடுப்பதால் வேறு வழியின்றி வேலை நிறுத்தம் செய்யும் நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது" என்றார்.
அதற்குப்பிறகும் மத்திய அரசு தனது முடிவை மாற்றிக் கொள்ளாவிட்டால் நவம்பர் மாதம் 2வது வாரத்தில் இருந்து கால வரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக வங்கி ஊழியர் கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர்.

