காங்கிரஸ் சார்பில் 87 வயது குமரி அனந்தன் போட்டியிட விருப்பம்

காங்கிரஸ் சார்பில் 87 வயது குமரி அனந்தன் போட்டியிட விருப்பம்

2 mins read

சென்னை: திமுக தலைமையிலான கூட்டணியில் இடம்ெபற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு நாங்குநேரி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அது மட்டுமல்லாமல் நாங்குநேரி தொகுதிக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் நெருங்கிய தொடர்பு இருந்து வருகிறது. இந்த நிலையில் இந்தத் தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான 87 வயது குமரி அனந்தன் விருப்பம் தெரிவித் துள்ளார்.

இவர், முன்னாள் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவரும் தற்போதைய தெலுங்கானா ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜனின் தந்தை. மேலும் வசந்த் அண்ட் கோ நிறுவனத்தின் உரிமையாளரான ஹெச். வசந்த குமாரின் சகோதரர் இவர். 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்ற காங்கிரஸ் கட்சிக்கு நாங்குநேரி தொகுதி ஒதுக்கப்பட்டது. அக்கட்சியின் சார்பாக ஹெச்.வசந்தகுமார் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால் மே மாதம் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் ஹெச்.வசந்த குமாருக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. இதில் வசந்தகுமார் வெற்றி பெற்று எம்பியானதால் நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகினார். இதனால் நாங்குநேரி தொகுதி காலியாக உள்ளது. இந்த நிலையில் தம்பி வசந்தகுமார் விலகிய அதே நாங்குநேரி தொகுதியில் போட்டியிட அவரது அண்ணன் குமரி அனந்தன் விருப்ப மனு அளித்துள்ளார்.

ஆனால் ஒரே குடும்பத்துக்கு வாய்ப்பு மாறி மாறி வழங்குவதா என்ற புகைச்சலும் காங்கிரஸ் கட்சியில் கிளம்பியுள்ளது. இந்த நிலையில் சத்யமூர்த்தி பவனில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த குமரி அனந்தன், "நாங்குநேரி தொகுதி மிக முக்கியமான தொகுதி. எனக்கு வாய்ப்பு தந்தால் போட்டியிட தயார். வெற்றியும் உறுதி. கடினமாக உழைப்பேன். நான் தனி அமைப்பு நடத்தியபோது ஜான் வின்சென்ட் என்பவரை நிறுத்தி வெற்றி பெறச்செய்தேன். என் தம்பி வசந்தகுமார் இந்த தொகுதியில் வெற்றி பெற்றவர். எனக்கும் இந்த தொகுதிக்கும், இதயத்தோடு நெருங்கிய தொடர்பு உள்ளது. நான் ஒருமுறை எம்பி யாகவும், 4 முறை எம்எல்ஏ ஆகவும் பணியாற்றியுள்ளேன்," என்று கூறி யுள்ளார்.

நாங்குநேரி தொகுதியில் நாடார் சமுதாய மக்களே அதிகம். அதனால்தான் கட்சி பாகுபாடு இல்லாமல் இந்த சமுதாயத்தைச் சேர்ந்த பிரமுகர்களே வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு வருகின்றனர்.

இதற்கிடையே ஆளும் அதிமுக வலுவான வேட்பாளரை இந்தத் தொகுதியில் நிறுத்தினால் அதனை காங்கிரஸ் கட்சி சமாளிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. நடிகரும் சமக தலைவருமான சரத்குமாரை அதிமுக சார்பில் களமிறக்கினால் காங்கிரசுக்கு திண்டாட்டமாக இருக்கும் என்றும் அதிமுக வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது. ஆனால் அதிமுக தலைமையின் முடிவு எப்படியிருக்கும் என்பது தெரியவில்லை. இந்த நிலையில் அதிமுக வேட்பாளர் இன்று அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.