பணத் தகராறு; பிரசாதத்தில் விஷம் கலந்து கொலை

பணத் தகராறு; பிரசாதத்தில் விஷம் கலந்து கொலை

1 mins read
e2716b45-542b-4555-a695-7fcf4c244959
கார்த்தி, அவரது மனைவி சரண்யா ஆகியோருக்கு வேலாயுதம் (வலது) கோயில் பிரசாதம் என்று சொல்லி ஒரு பொடியைக் கொடுத்து உட்கொள்ளச் சொன்னதாகக் கூறப்படுகிறது. படம்: தமிழக ஊடகம் -

கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்டதால், பிரசாதத்தில் விஷம் கலந்து கொடுத்து பேராசிரியர் ஒருவரைக் கொலை செய்ததாக வேலாயுதம் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை காசிமேடு சூரிய நாராயணன் தெருவைச் சேர்ந்த 35 வயதான கார்த்தி என்பவர் பேராசிரியராகப் பணியாற்றி வந்தார். அரசு கல்லூரியில் வேலை வாங்கித் தரும்படி கோரி வேலாயுதத்திடம் அவர் ஐந்து லட்ச ரூபாய் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், இரண்டு ஆண்டுகள் ஆகியும் வேலாயுதம் அவருக்கு வேலை வாங்கிக் கொடுக்காத நிலையில் கார்த்தி, தான் கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்டுள்ளார். இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை முல்லை நகர் பேருந்து நிலையத்தில் வேலாயுதத்தைச் சந்தித்த கார்த்தி, அவரது மனைவி சரண்யா ஆகியோருக்கு வேலாயுதம் கோயில் பிரசாதம் என்று சொல்லி ஒரு பொடியைக் கொடுத்து உட்கொள்ளச் சொன்னதாகத் தெரிகிறது. அங்கிருந்து வேலாயுதம் நகர்ந்துவிட்ட நிலையில், மயக்கமடைந்த கார்த்தியையும் சரண்யாவையும் பொதுமக்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கார்த்தி இறந்துவிட்டதாகவும் சரண்யா சிகிச்சை பெற்று வருவதாகவும் சொல்லப்படுகிறது. கார்த்தி - சரண்யா தம்பதிக்கு இரண்டு மகன்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. வேலாயுதம் கொடுத்த பொருளில் 'சல்ஃபியூரிக்' வேதிப்பொருள் கலக்கப்பட்டு இருந்தது என்றும், அது விஷத்தன்மை கொண்டது என்றும் கூறப்படுகிறது. இதனையடுத்து, தலைமறைவாக இருந்த வேலாயுதத்தைக் கைது செய்த போலிசார், அவரது வீட்டிலிருந்து 250 கிராம் சல்ஃபியூரிக் வேதிப்பொருளைக் கைப்பற்றியுள்ளனர். வேலாயுதம் கிண்டியில் உள்ள உணவு பாதுகாப்பு கழகத்தில் உதவியாளராகப் பணியாற்றியதாகக் கூறப்பட்டது.