அதிமுக சார்பில் நாராயணன் முத்தமிழ்ச்செல்வன் போட்டி

அதிமுக சார்பில் நாராயணன் முத்தமிழ்ச்செல்வன் போட்டி

1 mins read

சென்னை: நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் விவரங்களை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் நேற்றுகாலை அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக செயலாளர் முத்தமிழ்ச்செல்வனும், நாங்குநேரி தொகுதியில் ரெட்டியார்பட்டி வெ.நாராயணனும் போட்டியிடுவதாகக் கூறிய தமிழக துணை முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாகவும் செய்தியாளர்களிடம் கூறினார்.

இவ்விரு தொகுதிகளிலும் அக்டோபர் 21ஆம் தேதி நடைபெறும் இடைத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 24ல் எண்ணப்பட உள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக திமுக சார்பில் விக்கிரவாண்டி தொகுதியில் நா. புகழேந்தி போட்டியிடுவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

மற்றொரு தொகுதியான நாங்குநேரி கூட்டணிக் கட்சியான காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

நாங்குநேரியில் காங்கிரசுக்கு எதிராக அதிமுக நேரடியாகப் போட்டியிடுகிறது. இதேபோன்று விக்கிரவாண்டி தொகுதியில் திமுகவுக்கு எதிரான நேரடி போட்டியில் அதிமுக களம் இறங்கியுள்ளது.

முத்தமிழ்ச்செல்வன் அதிமுக வில் விழுப்புரம் மாவட்டம், காணை ஒன்றியச் செயலாளராக தற்போது பதவி வகிக்கிறார். திருநெல்வேலி புறநகர் மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளராக வெ. நாராயணன் உள்ளார்.

அதிமுக மீது தீவிர ஈடுபாடு கொண்டவரான நாராயணனுக்கு வாய்ப்புக் கொடுத்ததன் மூலம் எந்தப் பின்புலமும் இல்லாத தொண்டர்களாலும் கட்சியின் உயர்ந்த நிலையை அடையமுடியும் எனும் நிலை ஜெயலலிதாவுக்குப் பின்னரும் கட்சியில் தொடர்வதாகக் கட்சியினர் கூறியுள்ளனர்.