சென்னை: தேர்தலில் பலரும் வெற்றியையே இலக்காகக் கொண்டு போட்டியிடுவர். ஒரு சிலர் தோற்றபின் வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு அழகு என்று தத்துவம் பேசுவர். ஆனால் இவர்களில் ஒருவர் மிக வித்தியாசமாக நூற்றுக்கணக்கான முறை தோற்றாலும் மீண்டும் மீண்டும் தேர்தலில் போட்டியிட்டு வருகிறார். அவர்தான் தேர்தல் மன்னன் பத்மராஜன் (படம்).
இவர் நாங்குநேரி இடைத்தேர்தலில் போட்டியிடு வதற்காக தேர்தல் அதிகாரி நடேசனிடம் வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே உள்ள வீரக்காவல்புதூர் கிராமத்தைச் சேர்ந்த பத்மராஜன் வாஜ்பாய், மன்மோகன் சிங், ஜெயலலிதா, கருணாநிதி, ராஜசேகர ரெட்டி உள்ளிட்ட பல தலைவர்களையும் எதிர்த்து தேர்தலில் போட்டியிட்டுள்ளார்.
அதிபர் தேர்தலில் அப்துல்கலாம், பிரணாப் முகர்ஜி, ராம்நாத் கோவிந்தையும் எதிர்த்துப் போட்டியிட மனுத்தாக்கல் செய்தவர்.
தேர்தலில் வேட்புமனுத் தாக்கலின்போது அளிக்கப்படும் வைப்புத் தொகைக்காக மட்டும் தனது சொந்த பணம் ரூ.32 லட்சத்தை செலவழித்துள்ளார். இவர் ஒரு பெரிய செல்வந்தர் அல்ல. நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்.
206வது முறையாக நாங்குநேரியில் போட்டியிடுவதாகக் கூறும் அவர், தனது நோக்கம் வெற்றிபெறுவது அல்ல என்றும் கின்னஸில் இடம்பிடிப்பதே தமது லட்சியம் எனவும் தெரிவிக்கிறார்.
"ஏற்கெனவே லிம்கா புத்தகத்தில் இடம்பெற்றுவிட்டேன். கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுவிட்டால் தேர்தலில் போட்டியிடுவதையே நிறுத்திக்கொள்வேன்," என்று கூறுகிறார்.
இந்தியாவிலேயே அதிகமுறை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவியவர் பத்மராஜன்.

