சென்னை: கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்டதால் பிரசாதத்தில் நஞ்சைக் கலந்துகொடுத்து பேராசிரியர் ஒருவரைக் கொலை செய்த வேலாயுதத்தை போலிசார் கைது செய்துள்ளனர்.
சென்னை காசிமேடு சூரிய நாராயணன் தெருவைச் சேர்ந்த 35 வயதான கார்த்தி என்ற பேராசிரியர் விஷம் கலந்த பிரசாதத்தை சாப்பிட்டதால் இறந்துவிட்டதாகவும் சரண்யா சிகிச்சை பெற்று வருவதாகவும் சொல்லப்படுகிறது.
தலைமறைவாக இருந்த வேலாயுதத்தை எம்கேபி நகர் போலிசார் நேற்று மடக்கிப் பிடித்தனர்.
அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில், "சென்னை கிண்டியில் உள்ள மாநில அரசு உணவுப் பாதுகாப்பு ஆராய்ச்சி மையத்தில் உதவியாளராக பணியாற்றினேன்.
"கார்த்திக் எனக்கு அறிமுகமானபோது, அவருக்கு வேலை போனதை அறிந்து அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி அவரிடம் ரூ.5 லட்சம் வாங்கினேன். ஆனால் என்னால் கார்த்திக்குக்கு வேலை வாங்கித் தரமுடியவில்லை. அவர் கொடுத்த பணத்தையும் திருப்பித் தரமுடியவில்லை. ஆனால் கார்த்திக் என்னிடம் பணத்தைக் கேட்டு தொடர்ந்து நச்சரித்து வந்தார்.
"இதனால் ஆத்திரமடைந்த நான் கார்த்திக்கை தீர்த்துக்கட்ட முடிவு செய்தேன். நான் வேலை செய்யும் ஆராய்ச்சி மையத்தில் பயன்படுத்தும் விஷத்தன்மை கொண்ட பொடியை கோவில் பிரசாதத்தில் கலந்துகொடுத்து அவரைக் கொல்ல நினைத்தேன்.
"கார்த்திக்குக்கு வேலை கிடைத்துவிட்டதாகக் கூறி அவரை என் வீட்டிற்கு வரவழைத்து பிரசாதத்தைக் கொடுத்தேன். கணவன், மனைவி இருவரும் இறந்தபிறகு நாம் நிம்மதியாக வாழலாம் என நினைத்தேன். உண்மை தெரிந்து விட்டது," என்று கூறியுள்ளார்.

