சென்னை: தமிழகத்தில் பரவலாக மழை பெய்துவரும் நிலையில், டெங்கி காய்ச்சலின் தாக்கமும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அடுத்தடுத்து குழந்தைகள் இறந்து வருவது பெற்றோரை பீதியடையச் செய்துள்ளது.
தமிழகம் முழுவதும் டெங்கி பாதிப்பு மற்றும் அறிகுறியுடன் ஏராளமானோர் அரசு, தனியார் மருத்துவமனைகளுக்கு படையெடுத்து வருகின்றனர். சென்னையில் நேற்று முன்தினம் முகப்பேரைச் சேர்ந்த 6 வயது குழந்தை மகாலட்சுமி, மதுரவாயலைச் சேர்ந்த எட்டு மாதக் குழந்தை லோகித் என அடுத்தடுத்து இரண்டு உயிரிழப்புகள் ஏற்பட்டன. மகாலட்சுமியின் தம்பியும் டெங்கி பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகிறான்.
இதனைத் தொடர்ந்து திருப்பூரில் மற்றொரு குழந்தை இறந்துள்ளது. திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் வேடப்பட்டியைச் சேர்ந்த மன்சூர் அலியின் 5 வயது குழந்தை ரம்ஜான் பாத்திமா நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி இறந்தது. டெங்கி காய்ச்சலால் அடுத்தடுத்து குழந்தைகள் இறப்பது அச்சத்தை தந்துள்ளது.

