புதுச்சேரி: புதுச்சேரியைப் பொறுத்தவரையில் அதிமுக-பாஜக கூட்டணி உடைந்துவிட்டதற்கான அறிகுறிகள் தலைதூக்கி இருக்கின்றன. புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் நடக்கிறது.
அதில் என்ஆர் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் என்று வியாழக்கிழமை அதிமுக அறிவித்தது. அதேவேளையில், அந்தத் தொகுதியில் பாஜக தனித்துப் போட்டியிடப்போகிறது என்று அந்தக் கட்சியின் தலைவரான சாமிநாதன் தடாலடியாக அறிவிப்பு விடுத்தார்.
காமராஜர் நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதுமே கட்சி வேட்பாளர்களிடம் இருந்து விருப்ப மனுக்களை அதிமுக பெற தொடங்கியது.
அதேநேரத்தில், பாஜகவும் விருப்ப மனுக்களைப் பெற்றதால் இரண்டு கட்சிகளுக்கும் இடையில் கசப்பு போக்குக்கான அறிகுறி தெரியவந்தது. இவை காரணமாக புதுவை அரசியலில் பெரும் பரபரப்பு கிளம்பியது.
காமராஜர் நகர் தொகுதி என்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படும் என்று அறிவித்து அதற்கான உடன்பாட்டில் அதிமுக கையெழுத்திட்டதுமே புதுச்சேரி பாஜக அதிர்ச்சியில் வீழ்ந்தது.
பாஜகவுடன் கூட்டணி வைத்து இருக்கும் அதிமுக தன்னுடன் கலந்துபேசாமல் காமராஜர் நகர் தொகுதியை என்ஆர் காங்கிரசுக்கு எப்படி ஒதுக்க முடியும் என்று பாஜக குரல் கொடுத்தது. அதனையடுத்து காமராஜர் நகர் தொகுதியில் தனித்து மோதப்போவதாக பாஜக அறிவிப்பு விடுத்து இருக்கிறது.
விருப்ப மனு தாக்கல் செய்தவர்களிடம் இன்று நேர்காணல் நடத்தப்படும் என்று பாஜக பிரகடனப்படுத்தி உள்ளது.
அடுத்த மாதம் 21ஆம் தேதி தமிழ்நாட்டில் நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடக்கவிருக்கிறது. இந்த இரண்டு தொகுதிகளிலும் அதிமுக போட்டியிடுகிறது.
இருந்தாலும் தமிழ்நாட்டில் அந்த இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அறிவிப்பு எதையும் பாஜக இன்னமும் விடுக்கவில்லை.

