நாங்குநேரி: காங்கிரஸ் கட்சிக்கு தலைவலி போய் திருகுவலி

நாங்குநேரி: காங்கிரஸ் கட்சிக்கு தலைவலி போய் திருகுவலி

2 mins read

நாங்குநேரி: அடுத்த மாதம் நடக்க இருக்கும் நாங்குநேரி இடைத்தேர்தலைப் பொறுத்தவரையில் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவலி போய் திருகுவலி வந்த நிலையில் இருப்பதாக அரசியல் அரங்கில் பேச்சு அடிபடுகிறது.

நாங்குநேரி தொகுதியில் வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பினராக இருந்த காங்கிரஸ் பேராளர், நாடாளுமன்றத் தேர்தலில் வென்றதை அடுத்து அந்தத் தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

திமுகவுடன் கூட்டு சேர்ந்துஇருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் நாங்குநேரி தொகுதி ஒதுக்கப்படாமல் போகக்கூடும் என்று தகவல்கள் வெளியாகி வந்தன. இது காங்கிரசுக்கு பெரும் தலைவலியாக இருந்தது.

என்றாலும் கடைசியில் நாங்குநேரியை காங்கிரஸ் கட்சிக்கே திமுக விட்டுக்கொடுத்தது.

ஆனால் காங்கிரஸ் கட்சிக்குள் யார் போட்டியிடுவது என்பதன் தொடர்பில் பெரும் பிரச்சினை மூண்டு இருப்பதாக கூறப்படுகிறது.

"காங்கிரஸ் கட்சிக்கு நாங்குநேரியைப் பொறுத்தவரையில் தலைவலி போய் திருகுவலி வந்த கதைதான். திமுகவிடம் இருந்து ஒரு வழியாக அந்தத் தொகுதியைப் பெற்றுக்கொண்ட காங்கிரஸ் கட்சி இப்போது யாரை நிறுத்துவது என்பதன் தொடர்பில் உட்கட்சி பூசலை சந்தித்து வருகிறது," என்று கட்சிப் பேராளர் ஒருவர் கூறினார்.

இந்நிலையில், நாங்குநேரி, விக்கிரவாண்டி, புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதி ஆகியவற்றுக்கான தன் வேட்பாளர்களை நேற்று நாம் தமிழர் கட்சி அறிவித்தது.

இடைத்தேர்தல் நடக்கும் தொகுதிகளில் திமுக, அதிமுக கட்சிகள் மும்முரமாக பிரசாரம் தொடங்கி இருக்கும் நிலையில், அதிமுக அணியில் உள்ள தேமுதிக, உள்ளாட்சித் தேர்தலில் கணிசமான இடங்களை தனக்கு ஒதுக்கவேண்டும்; தேமுதிக வேட்பாளர்களின் செலவை அதிமுக ஏற்கவேண்டும் என்று அதிமுகவுக்கு இரண்டு நிபந்தனைகளை விதித்து இருப்பதாகக் கூறப்படுகிறது.