நாங்குநேரி: தமிழ்நாட்டில் அடுத்த மாதம் நடக்கவிருக்கும் நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுகவின் இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்டு இருக்கும் உதயநிதி ஸ்டாலினை மையமாக வைத்து வெற்றி மாலையைச் சூட அந்தக் கட்சி வியூகம் வகுத்துள்ளதாக அரசியலில் பேச்சு கிளம்பி இருக்கிறது.
இடைத்தேர்தல் நடக்கவிருக்கும் நாங்குநேரி தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டு இருக்கும் நிலையில் விக்கிரவாண்டி திமுக வேட்பாளராக உதயநிதி ஸ்டாலின் களமிறங்கக்கூடும் என்றும் பேச்சு அடிபட்டது. ஆனால் இதை உறுதிப்படுத்த முடியவில்லை.
தேர்தலில் போட்டியில்லை என்றாலும் உதயநிதியை முன்வைத்தே இந்த இரண்டு தொகுதிகளிலும் காய்களை நகர்த்திவிட திமுக திட்டமிடுவதாகக் கட்சியினர் கூறுகிறார்கள்.
"இரண்டு தொகுதிகளிலும் நடக்கும் பிரசாரத்திற்கு உதயநிதி ஸ்டாலினே தலைமை ஏற்கப்போகிறார். இரு தொகுதிகளிலும் வெற்றியைச் சாதித்து அதன்மூலம் கட்சியில் தன் நிலையை உதயநிதி பலப்படுத்திக்கொள்ளப்போகிறார்," என்று திமுகவினர் கூறுகிறார்கள்.
எளிமையாகப் பேசி மக்களைக் கவரக்கூடியவராக உதயநிதி ஸ்டாலின் இருப்பதால் அவருக்கு இளைஞரிடையே செல்வாக்குக் கூடி வருகிறது என்றும் அது அப்படியே வாக்குகளாக மாற வாய்ப்பு இருக்கிறது என்றும் சொல்கிறார்கள்.
இதனிடையே, நாங்குநேரியில் காங்கிரஸ் வேட்பாளராக ரூபி மனோகரன் போட்டியிடுவார் என்று அந்தக் கட்சி அறிவித்து உள்ளது. இவர் காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இப்போது இருந்து வருகிறார். நாங்குநேரியில் கடந்த வெள்ளிக்கிழமையில் ஒரே நாளில் ஏழு சுயேச்சை வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்தனர். புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதியிலும் அடுத்த மாதம் இடைத்தேர்தல் நடக்கிறது. அதிமுக கூட்டணியில் இருந்து விலகி புதுச்சேரி பாஜக தனித்து போட்டியிடப்போவதாக தகவல்கள் வெளியாயின. அந்தக் கட்சி இடைத்தேர்தல் வேட்பாளருக்கான நேர்காணலையும் நடத்தியது.
ஆனால் கட்சி மேலிட உத்தரவை அடுத்து தனித்து போட்டியிடும் முடிவைக் கைவிட்டு என்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிக்கப்போவதாக பாஜக அறிவித்தது.

