'நீட்' மோசடி: வெளிநாட்டிற்குத் தப்பியோடிய மாணவர் இர்ஃபான்

'நீட்' மோசடி: வெளிநாட்டிற்குத் தப்பியோடிய மாணவர் இர்ஃபான்

1 mins read

தேனி: மருத்துவப் படிப்பிற்கான 'நீட்' நுழைவுத் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக மேலும் மூன்று மாணவர்களும் அவர்களின் தந்தையரும் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

தமக்குப் பதிலாக இன்னொருவரைத் தேர்வு எழுதச் செய்து, தேர்வில் வெற்றிபெற்று, தேனி மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த உதித் சூர்யா என்ற மாணவரும் அவரின் தந்தை டாக்டர் வெங்கடேசனும் அண்மையில் கைது செய்யப்பட்டு, மதுரைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மேலும் சிலர் இதேபோன்று ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து, சத்யசாய் மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த மாணவி அபிராமி, பாலாஜி மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த பிரவீன், எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரியில் பயின்று வரும் ராகுல் ஆகிய மூன்று மாணவர்களையும் அவர்

களின் தந்தையரையும் சிபிசிஐடி போலிசார் கைது செய்துள்ளனர்.

விழுப்புரம், கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய மாவட்டங்களில் போலிசார் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டு வருவதால் மேலும் சில மாணவர்கள் பிடிபடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மொரிஷியஸ் நாட்டில் தஞ்சம்

இதற்கிடையே, இர்ஃபான் என்ற இன்னொரு மாணவரும் இதேபோன்று ஆள்மாறாட்டம் செய்து மருத்துவக் கல்லூரியில் சேர்ந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிபிசிஐடி அதிகாரிகள் அவரைத் தேடிச் சென்றபோது, அவர் மொரிஷியசுக்குத் தப்பிச்சென்றது தெரியவந்தது. இதையடுத்து, அவரைக் கைது செய்ய வெளியுறவுத் துறையை சிபிசிஐடி நாடியுள்ளது. இர்ஃபான் ஏற்கெனவே மொரிஷியசில் மருத்துவப் படிப்பில் சேர்ந்து, பின் இடையிலேயே திரும்பி வந்தவர் எனக் கூறப்படுகிறது.