தஞ்சாவூர்: நாற்பது ஆண்டுகளுக்குமுன் டென்மார்க் தம்பதியருக்குத் தத்துக் கொடுக்கப்பட்ட பிள்ளை, இப்போது பெற்ற அன்னையைத் தமிழகத்தில் தேடி அலைகிறார்.
டேவிட், 41, என்ற இந்த ஆடவர், தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டையைச் சேர்ந்த கலியமூர்த்தி - தனலட்சுமிக்குப் பிறந்தவர். சாந்தகுமார் என்பது இவருக்குப் பெற்றோர் வைத்த பெயர்.
வறுமை காரணமாக சென்னைக்குக் குடும்பம் குடிபெயர, 1979ஆம் ஆண்டில் இவரும் இவரது சகோதரர் ராஜன் என்ற மார்ட்டினும் பல்லாவரத்தில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்க்கப்பட்டனர்.
பின் அவர்கள் இருவரும் இரு வேறு டென்மார்க் தம்பதியருக்குத் தத்துக் கொடுக்கப்பட்டனர்.
தாம் வளர்ப்புப் பிள்ளைதான் என்பதை அறிந்த டேவிட், பெற்ற தாயைத் தேடி தமிழகத்திற்கு வந்துள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம், புனே நகரைச் சேர்ந்த அருண் டோஹ்லி என்ற தொண்டூழியர், அவருடைய வழக்கறிஞர் அஞ்சலி பவார் ஆகியோர் உதவிபுரிய, தமது குடும்பத்துடன் சிறுவயதில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இவருக்குக் கிடைத்தன. அதன்பிறகே, தம் சகோதரரும் தத்துக் கொடுக்கப்பட்டதை இவர் அறிந்தார்.
அம்மாப்பேட்டை ஊராட்சி அலுவலர்கள் துணையுடன் தாம் பிறந்த வீட்டைக் கண்டுபிடித்துவிட்ட இவர், விரைவில் பெற்றோரையும் கண்டுபிடித்துவிட முடியும் என்ற நம்பிக்கையுடன் தமது தேடுதல் பணியைத் தொடர்கிறார்.

