சேலம்: கேரளம், தமிழகம் நதிநீர்ப் பங்கீட்டுக்கு இரண்டு மாதங்களில் தீர்வு காணப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலத்தில் வீரபாண்டி தொகுதியில் உள்ள நெய்க்காரப்பட்டியில் முதல்வரின் சிறப்பு குறைதீர் திட்ட முகாம் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.
"மக்களுக்குப் பயனில்லாத ஆட்சி என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினும் எதிர்க்கட்சியினரும் குறை கூறி வருகின்றனர். அவர்களுக்கு நாங்கள் நிறைவேற்றி வரும் திட்டத்தின் மூலம் பதிலளித்து வருகிறேன். பருவ மழைக் காலங்களில் பெய்யும் மழை நீரைச் சேகரிக்கும் வகையில் குடிமராமத்துத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பொதுப்பணித் துறையின் கீழ் 14,000 ஏரிகளும் ஊராட்சி ஒன்றியங்களில் 26,000 ஏரிகளும் உட்பட மொத்தம் 40,000 ஏரிகளையும் ஒரே நேரத்தில் குடிமராமத்துத் திட்டத்தின் மூலம் தூர்வார முடியாது.
எனவே, படிப்படியாக நிதி ஒதுக்கி ஏரிகளைத் தூர்வாரி வருகிறோம். தமிழகத்தில் இத்தனை ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த திமுக, காவிரியின் குறுக்கே எத்தனை தடுப்பணை களைக் கட்டியது, எதையும் செய்யவில்லை. எங்களை விமர்சிக்கத் தகுதியோ அருகதையோ திமுகவுக்கு இல்லை. மேட்டூரில் இருந்து கொள்ளிடம் வரை ஒரு தடுப்பணையைக்கூட திமுக கட்டவில்லை. ஆனால் காவிரியின் குறுக்கே மூன்று முதல் நான்கு இடங்களில் தடுப்பணை கட்ட நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம். தமிழகம்-கேரளம் இடையிலான நதிநீர்த் திட்டப் பிரச்சினைகளுக்கு சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு இரு மாநிலப் பிரச்சினைகளுக்கு இறுதி வடிவம் கொடுக்கும். இரண்டு மாதங்களில் பிரச்சினைக்குத் தீர்வு கண்டு அனைத்து நதிநீர்த் திட்டங்களும் செயல்படுத்தப்படும்," என்று முதல்வர் கூறினார்.

