சென்னை: இந்தியா குறித்து அமெரிக்கா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் நிறைய எதிர்பார்ப்புகள் உள்ளதாகப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நேற்று சென்னைக்கு வருகை தந்த அவர், விமான நிலையம் அருகே பாஜகவினர் மத்தியில் உரையாற்றியபோது, சென்னைக்கு வரும்போதெல்லாம் தாம் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாகக் குறிப்பிட்டார்.
"தமிழ் மொழியின் தொன்மை மற்றும் பெருமை குறித்து அமெரிக்காவில் நான் பேசியதைத் தொடர்ந்து, அது அந்நாடு முழுவதும் எதிரொலிக்கிறது. 130 கோடி மக்களும் ஒருங்கிணைந்து உழைத்தால் இந்தியா உலகளவில் மிகப்பெரிய கௌரவத்தைப் பெறும்," என்று முழங்கினார் பிரதமர் மோடி.
தமிழகத்தின் இட்லி, சாம்பார், வடை உள்ளிட்ட உணவு வகைகள் உற்சாகம் தரக்கூடியவை என்று குறிப்பிட்ட அவர், சென்னை மாநகரம் மிகச்சிறந்த கலாசாரம், மாபெரும் பாரம்பரியம், சிறந்த உணவு வகைகளைக் கொண்டது என்றார்.
சென்னைக்கு அருகே உள்ள மாமல்லபுரம் மிகச்சிறந்த தொன்மையான சிற்பங்களை கொண்ட நகரம் என்று புகழாரம் சூட்டிய பிரதமர், தமிழர்களின் விருந்தோம்பல் மிகச் சிறப்பானது என்றும் பாராட்டு தெரிவித்தார்.
"இந்திய பொருளாதாரம் 5 டிரில்லியன் டாலர் என்ற இலக்கை நோக்கி முன்னேறி வருகிறது. இந்தியாவை பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் உற்று நோக்குகிறது அமெரிக்கா. நமது நாட்டை முன்னேற்ற, நாட்டில் உள்ள அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும். இது உலக நன்மைக்காகவும் இருக்க வேண்டும்.
"டெல்லியில் இருந்தபடியே இதை நான் செய்துவிட முடியாது. நாம் இருக்கும் இடம் நகரமோ, கிராமமோ எதுவாக இருந்தாலும், வேற்றுமை பல இருந்தாலும், அதைக் கடந்து நம் தேசத்தின் முன்னேற்றத்துக்கு நாம் பணியாற்ற வேண்டும்," என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.

