ரூ.100 கோடி வங்கிக் கடன் மோசடி; திமுக பிரமுகர் கைது

ரூ.100 கோடி வங்கிக் கடன் மோசடி; திமுக பிரமுகர் கைது

2 mins read
a34e9ef0-9835-48cf-95f7-f68aa2e0e4a1
-

சென்னை: சென்னை, ஆந்திராவைச் சேர்ந்த பல தொழில் அதிபர்களிடமும் வங்கிக் கடன் வாங்கித் தருவதாகக் கூறி, அவர்களிடம் கோடிக்கணக்கில் பணத்தைச் சுருட்டியுள்ள திமுக பிரமுகர் முத்துவேல் போலிசாரால் இன்று கைது செய்யப்பட்டார். கழுத்து, கைகளில் தங்க நகைகளை அள்ளிப் போட்டுக் கொண்டுள்ள முத்துவேல், 42, சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்தவர். இவர் சென்னையில் ரூ.100 கோடி வங்கிக் கடன் வாங்கித் தருவதாகச் சொல்லி நிகில் கண்ணா என்பவரையும் மற்றும் பலரையும் ஏமாற்றி இவரது வலையில் சிக்க வைத்துள்ளார்.

ராஜஸ்தானைச் சேர்ந்த நிகில் கண்ணா அங்கு கட்டுமான நிறுவனத்தை நடத்தி வருகிறார். இதுபோன்று சென்னையிலும் ஒரு நிறுவனம் தொடங்க வங்கிக் கடன் பெற முத்துவேலை நாடியுள்ளார்.

"தனக்கு எப்படியும் வங்கியில் ரூ.100 கோடி கடன் கிடைத்துவிடும்," என்று நம்பிக்கையோடு இருந்த நிகில் கண்ணாவிடம் முத்துவேல் ஒலி போலி பத்திரத்தைக் காட்டி "வங்கிக் கடன் கிடைப்பது உறுதியாகி விட்டது," என்று கூறி ரூ. 2.62 கோடியைக் கமிஷனாகப் பெற்றுள்ளார். ஆனால் நீண்ட நாள் ஆகியும் வங்கிக் கடன் வராமல் போகவே தான் கொடுத்த கமிஷனை நிகில் கண்ணா கேட்க, அவரை அடியாட்களை வைத்து மிரட்ட ஆரம்பித்துள்ளார் முத்துவேல்.

இதையடுத்து நிகில் கண்ணா மத்திய குற்றப்பிரிவில் புகார் அளிக்க, இப்போது முத்துவேல் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவருக்கு உடந்தையாக இருந்த அஜ்மல், வாசு ஆகியோரை போலிசார் தேடி வருகின்றனர்.

திமுகவின் பகுதி அமைப்பாள ராக விளங்கிய முத்துவேலுக்கு கொளத்தூர், வில்லிவாக்கம் பகுதிகளில் தெரியாத நபர்களே இல்லை என்றும் கூறப்படுகிறது.