வேலை வாங்கித் தருவதாகக் கூறி 600 பெண்களுக்கு பாலியல் தொல்லை

வேலை வாங்கித் தருவதாகக் கூறி 600 பெண்களுக்கு பாலியல் தொல்லை

2 mins read

சென்னை: பெரிய பெரிய நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 600க்கும் மேற்பட்ட இளம்பெண்களை ஏமாற்றியுள்ள சென்னை ஐடி ஊழியர் பிரதீப் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் பெண்களின் கவர்ச்சி புகைப்படங்களை அனுப்பி வைக்குமாறும் மிரட்டி பிரதீப் பாலியல் தொல்லை கொடுத்து வந்த தாகவும் கூறப்படுகிறது.

சென்னையில் பிரபல ஐடி நிறுவனமான டிசிஎஸ்சில் பணிபுரிந்துவந்த பிரதீப், திருமணமாகி மனைவி யுடன் திருவொற்றியூரில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் 'குயிக்கர் டாட் காம்' என்ற இணையத்தளப் பக்கத்தில் வேலை தேடுபவர்கள் தங்களது விவரங்களைப் பதிவு செய்துவந்தனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்டுள்ள பிரதீப் இந்த இணையத்தளத்தில் குவிந்துகிடந்த இளம்பெண்களின் வேலைக்கான விண்ணப்பங்களைச் சேகரித்துள்ளார்.

குறிப்பாக ஸ்டார் ஹோட்டல்களில் வரவேற்பாளர் பணிக்கு விண்ணப்பித்திருந்த பெண்களின் தொலைபேசி எண்களை வைத்துக்கொண்டு அதன்மூலம் தொடர்புகொண்டு பேசிய பிரதீப், ஸ்டார் ஹோட்டலில் இருந்து அழைப்பதைப் போன்று உரையாடி அவர்களின் வேலை ஆசையைத் தீவிரப்படுத்தியுள்ளார்.

இதில் மிகவும் ஆர்வமாக இருந்த பெண்களிடம் நீங்கள் முதல் சுற்றில் தேர்வாகிவிட்டீர்கள். அடுத்த சுற்றின் அழைப்பிற்கு எச்.ஆர். நிர்வாகி அர்ச்சனா என்பவர் உங்களைத் தொடர்புகொள்வார் என்று கூறிவிட்டு தொடர்பை துண்டித்துக்கொள்வாராம் பிரதீப்.

அதன்பின்னர் அர்ச்சனா என்ற பெயரில் இவரே போலி எண்ணைக் கொண்டு வாட்ஸ்அப் செயலி மூலம் சம்பந்தப்பட்ட பெண்களுக்கு குறுந்தகவலை அனுப்பியுள்ளார்.

இரண்டாவது சுற்று நேர்காணல் வாட்சப்பில் மட்டும் நடக்கும் எனவும் பேசும் அவர், வரவேற்பாளர் பணிக்குப் பெண்களின் தோற்றமும் முக்கியம் என்பதால் உங்களது முழு புகைப்படத்தை அனுப்பி வையுங்கள் எனவும் கூறியுள்ளார்.

சில பெண்கள் இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தாலும் பெரும்பாலானோர் பணி ஆர்வம் காரணமாகப் புகைப்படங்களை அனுப்பியுள்ளனர்.

மேலும் இறுக்கமான ஆடை அணிந்து கவர்ச்சியான புகைப்படங்களையும் கேட்டுப் பெற்றுக்கொண்ட பிரதீப், இந்த ஏமாற்று வலையில் சிக்கிய அனைத்து பெண்களிடமும் தான் ஒரு ஆண் என்றும் தான் சொல்வதைச் செய்யாவிட்டால் உங்களது கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவேன் என்றும் மிரட்டிஉள்ளார்.

அதிர்ச்சியடைந்த இளம்பெண்கள் பிரதீப்பின் மிரட்டலை மீறமுடியாமல் நிர்வாணக் கோலத்தில் வீடியோ அழைப்பு, கேட்கும் போதெல்லாம் பணம் கொடுக்கும் தொல்லைக்கு ஆளாகியுள்ளனர்.

இந்நிலையில் பிரதீப்பின் வலையில் சிக்கிய தெலுங்கானா மாநில பெண் ஒருவர் ஹைதராபாத் காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளார்.

கைபேசி எண்ணை வைத்துஅவரைத் தேடி வந்த ஹைதராபாத் போலிசார் சென்னையில் பிரதீப்பை கைது செய்தனர். விசாரணையில் இதுபோன்று 600 பெண்கள் இவரிடம் சிக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது. விசாரணை தொடர்கிறது.