சென்னையில் கைபேசிகளைத் திருடிய ஆந்திர கும்பல் சிக்கியது

சென்னையில் கைபேசிகளைத் திருடிய ஆந்திர கும்பல் சிக்கியது

2 mins read

சென்னை: சென்னையில் 10க்கும் மேற்பட்ட ஆட்களைத் திருட்டு வேலைக்கு என்றே அமர்த்தி வாரா வாரம் ரூ.5,000 முதல் ரூ.6,000 வரை சம்பளம் கொடுத்து வந்த ஒரு கும்பலைப் போலிசார் கைது செய்துள்ளனர்.

திரைக்காட்சிகளை மிஞ்சும் வகையில் இந்த திருட்டுச் சம்பவங்கள் நடந்து வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

சென்னையில் வாடகை வீட்டில் தங்கி வாரச் சம்பளத்துக்கு கைபேசிகளைத் திருடியும் கொள்ளையடித்தும் வந்துள்ள ஆந்திராவைச் சேர்ந்த 11 பேர் கொண்ட கும்பலைப் பிடித்துள்ள போலிசார் அதுகுறித்த விவரங்களை நேற்று வெளியிட்டனர்.

சென்னை பூக்கடை அருகே சந்தேகப்படும்படி சுற்றித் திரிந்த இருவரை யானை கவுனி போலிசார் பிடித்து விசாரித்துவிட்டு அவர்களை விடுவித்துவிட்டனர்.

எனினும் அவர்கள் மீது எப்போதும் ஒரு கண் இருக்கும் வகையில் அவர்களது அன்றாட நடவடிக்கைகளை போலிசார் ரகசியமாக கண்காணித்து வந்தனர்.

அவர்கள் திருவள்ளூர் மாவட்டம், சோழவரத்தில் உள்ள ஒரு வீட்டிற்கு அடிக்கடி செல்வதைகண்டுபிடித்த போலிசார் அந்த அந்த வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்தனர்.

அங்கு தங்கியிருந்த அந்த கும்பலின் தலைவன் ரவி மற்றும் ஆந்திராவைச் சேர்ந்த 10 பேர் கும்பலைக் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் அளித்த வாக்குமூலம் அதிரவைத்துள்ளது.

ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் உள்ள ஆட்டோ நகர் கிராமத்தைச் சேர்ந்த ரவி, ஆரம்பத்தில் சென்னைக்கு வந்து பல இடங்களில் தச்சு வேலை செய்து வந்துள்ளான். இதில் போதிய வருமானம் கிடைக்காததால் இரண்டு மூன்று முறை கைபேசி பறிப்பில் அவன் ஈடுபட்டுள்ளான்.

இதில் அதிக பணம் கிடைத்ததால் இதையே ஒரு தொழிலாக செய்யும் எண்ணத்தில் தனது கிராமத்தைச் சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களை சென்னைக்கு வரவழைத்துள்ளான் ரவி.

வாடகைக்கு வீடு எடுத்து தங்க வைத்து, அவர்களுக்கு எப்படி கைபேசிகளைக் கொள்ளை அடிப்பது என பயிற்சி அளித்துள்ளான்.

கூட்டமாக இருக்கும் இடங்களில் செய்தித்தாளை படிப்பது போன்று கைபேசி பறிப்பது, திருடிய கைபேசியின் சிம் கார்டு, மெமரி கார்டுகளை கழற்றி வீசுவதற்கு பயிற்சி, பயிற்சி முடித்தவுடன் ஐடி ஊழியர் போல திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை மட்டுமே வேலை, வார சம்பளம் 5,000 முதல் 6,000 என அள்ளி வீசி அவர்களை சென்னையிலேயே தங்கவைத்துள்ளான் ரவி.

கொள்ளையடித்த கைபேசிகளை ஆந்திராவுக்கு கொண்டுசென்று விற்றுவிடுவானாம் ரவி.

இந்தக் கும்பல் சென்னையில் ஒருநாளில் குறைந்தது 40 முதல் 50 கைபேசிகள் என கடந்த இரு ஆண்டுகளில் சுமார் 5,000 கைபேசிகளைக் கொள்ளையடித்துள்ளதாகக் கூறியுள்ளனர் போலிசார்.