சென்னை: தமிழகம் எங்கும் வேகமாகப் பரவி வரும் டெங்கிக் காய்ச்சல் காரணமாக 3,000 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் சென்னையில் 80 பேர் இக்காய்ச்சலுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அத்துடன் என்ன காய்ச்சல் என்றே கூறமுடியாத வகையில் மர்மக் காய்ச்சலுக்காக சென்னை யில் 1,000 பேர் சிகிச்சை பெற அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
டெங்கி காய்ச்சல் அறிகுறிகளுடன் வருபவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் தனி காய்ச்சல் வார்டில் வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
தமிழகத்தில் மற்ற மாவட்டங்களைக் காட்டிலும் சென்னையில் டெங்கி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் 34 குழந்தைகளும் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் 22 பேரும் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் 10 பேரும் ராயப்பேட்டை மருத்துவமனையில் 9 பேரும் ஸ்டான்லி மருத்துவமனையில் ஐவரும் டெங்கிக் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதற்கிடையே சேலம் மாவட்டத்தில் 44 பேர் டெங்கி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெங்கி பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என ஆட்சியர் ராமன் தெரிவித்துள்ளார்.

