நாகை வயல்களில் அதிநவீன புரட்சி: மருந்தடிக்கும் ஆளில்லா வானூர்திகள்

நாகை வயல்களில் அதிநவீன புரட்சி: மருந்தடிக்கும் ஆளில்லா வானூர்திகள்

1 mins read
f36299a0-da01-4d59-b147-1ef926dfe2f4
நாகை மாவட்டத்தில் மயிலாடுதுறையைச் சுற்றியுள்ள ஊர்களில் முப்போக நன்செய் வயல்களில் ஆட்கள் பற்றாக்குறை காரணமாக விதை தெளிப்பது, நாற்று நடுவது, அறுவடை செய்வது போன்ற பணிகள் எல்லாம் ஏற்கெனவே இயந்திரமயமாகிவிட்டன. இந்நிலையில், ஆளில்லா வானூர்திகள் இப்போது பூச்சி மருந்து அடிக்கப் பயன்படுத்தப்படுகின்றன. படம்: தமிழக ஊடகம் -

மயிலாடுதுறை: தமிழ்நாட்டில் குறிப்பாக நாகை மாவட்டத்தில் இருக்கும் மயிலாடுதுறையைச் சுற்றியுள்ள ஊர்களில் முப்போக நன்செய் நிலத்தில் விவசாயம் ஏற்கெனவே இயந்திரமயமாகிவிட்டது. நாகை மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் சுமார் 3 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி செய்ய இலக்கு உள்ளது.

ஆட்கள் பற்றாக்குறை காரணமாக விதை விதைப்பது, நாற்று நடுவது, அறுவடை செய்வது உள்ளிட்ட பல பணிகளையும் ஏற்கெனவே இயந்திரங்கள் செய்து வருகின்றன.

ஆனாலும் பூச்சி மருந்து தெளிப்பது உள்ளிட்ட சில பணிகளுக்குக் கூலித்தொழிலாளர்கள்தான் பயன்படுத்தப்பட்டு வருகிறார்கள். என்றாலும் இப்போது அத்தகைய நாட்சம்பள தொழிலாளிகளை வேலையில் அமர்த்துவது பெரும் சிரமமாகிவிட்டது.

கைதேர்ந்த விவசாயிகள் தமிழ்நாட்டை போல வெளிமாநிலங்களிலும் இல்லை. இதனால் இப்போது பல மிராசுதாரர்களும் ஆளில்லா வானூர்திகளைப் பயன்படுத்தத் தொடங்கி இருக்கிறார்கள்.

இந்த வானூர்திகள் ஒரு ஏக்கரில் 5 நிமிடத்தில் பூச்சி மருந்தை அடித்துவிடுகின்றன. இதற்காக பெரிய அளவில் ஆளில்லா விமானங்கள் உருவாக்கப்பட்டு திரவ வடிவிலான பூச்சி மருந்து அந்த வானூர்திகளில் ஏற்றப்படுகிறது.

அவற்றை வரப்புகளில் இருந்தபடி விவசாயிகள் தங்களுடைய ஆன்ட்ராய்டு கைபேசி மூலம் இயக்குகிறார்கள். வானூர்திகள் தங்களுக்குக் கிடைத்துள்ள வரப்பிரசாதம் என விவசாயிகள் கூறுகிறார்கள்.