நீட் தேர்வில் இமாலய மோசடி

நீட் தேர்வில் இமாலய மோசடி

2 mins read

சென்னை: இந்தியாவில் மருத்துவம் படிக்க அவசியமான நீட் தேர்வில் பல மோசடிகள் அம்பலமாகி வரும் நிலையில், அதில் இமாலய மோசடி நடந்து இருப்பது இப்போது தெரியவந்து இருக்கிறது.

இரண்டு மாணவர்கள் இரண்டு இடங்களில் தேர்வு எழுதி இருக்கிறார்கள். இது மோசடிக்கெல்லாம் மோசடி என்று வர்ணிக்கப்படுகிறது.

சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த பிரவீன் என்பவர் 2019 நீட் தேர்வை சென்னை ஆவடி மையத்தில் எழுதினார். அதேவேளையில், அவர் பெயரில் தாக்கலான மற்றொரு விண்ணப்பத்தைப் பயன்படுத்தி யாரோ ஒருவர் டெல்லியில் தேர்வு எழுதி இருக்கிறார்.

ஆவடியில் தேர்வு எழுதிய பிரவீன் தோல்வி அடைந்துவிட்டார். டெல்லியில் தேர்வு எழுதிய போலி பிரவீன் 348 மதிப்பெண்களுடன் தேர்ச்சி அடைந்துவிட்டார்.

இதேபோல, ராகுல் டேவிஸ் என்பவர் கோவையில் நீட் தேர்வு எழுதி 125 மதிப்பெண்கள் பெற்று கோட்டைவிட்டார். போலி ராகுல் டேவிஸ் உத்திரப்பிரதேசம் லக்னோவில் தேர்வு எழுதி 306 மதிப்பெண்களுடன் தேர்ச்சி அடைந்து இருக்கிறார்.

இந்த இமாலய மோசடியில் மேலும் ஒரு கூடுதல் மோசடியாக இந்த இரு மாணவர்களும் வெவ்வெறு பிரிவுகளில் அதாவது ஓபிசி என்ற பிரிவிலும் வேறு ஒரு பிரிவிலும் விண்ணப்பம் செய்து இருக்கிறார்கள்.

பிரவீன் காட்டாங்குளத்தூரில் உள்ள மருத்துவக் கல்லூரியிலும் ராகுல் குரோம்பேட்டை மருத்துவக் கல்லூரியிலும் இப்போது பயின்று வருகிறார்கள். என்றாலும் இந்த இருவரும் அவர்களுடைய தந்தையர்களுடன் கைதாகி இருக்கிறார்கள்.

நீட் தேர்வு மோசடியில் முறைகேடு செய்து சிக்கியுள்ள நான்கு மாணவர்களும் ஒவ்வொரு விதமான மோசடிகளைக் கையாண்டு மருத்துவப் படிப்பில் சேர்ந்து இருக்கிறார்கள்.

உதித் சூர்யா என்ற ஒரே ஒரு மாணவர் ஆள்மாறாட்டம் செய்ததாக முதன்முதலில் புகார் கிளம்பியது. அதையடுத்து பல மாணவர்கள் பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகிறார்கள்.

மாணவர் ஒருவரின் தந்தை போலி மருத்துவர் என்ற உண்மையும் விசாரணையில் வெளிவந்து இருக்கிறது. நீட் தேர்வு மோசடி பற்றி சிபிசிஐடி போலிசார் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள். இந்தத் தேர்வு தொடர்பான ஆள்மாறாட்ட விவகாரம் அன்றாடம் ஏதோ ஒரு மோசடியை அம்பலப்படுத்தி வருகிறது.

இதனிடையே, நீட் ஆள்மாறாட்டம் தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் அதிகாரிகளின் துணை இல்லாமல் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் நடந்திருக்க வாய்ப்பே இல்லை என்று கருத்து தெரிவித்தது.

இந்த மோசடியில் ஒரே ஒரு இடைத்தரகருக்கு மட்டும்தான் தொடர்பு என்று கூறப்படுவதையும் நம்புவதற்கில்லை என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.

வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் இந்த ஆள்மாறாட்ட விவகாரத்தில் எத்தனை பேர் ஈடுபட்டு இருக்கிறார்கள், எவ்வளவு பணம் கைமாறியது என்று தொடர்ந்து கேள்விகளை எழுப்பியது.

நீட் தேர்வு மோசடி பற்றி விசாரித்து வரும் சிபிசிஐடி போலிஸ் அக்டோபர் 15ஆம் தேதி தன்னுடைய அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.