மின் பேருந்துகள் தனியார்வசமாகும்

மின் பேருந்துகள் தனியார்வசமாகும்

1 mins read

சென்னை: தமிழ்நாட்டில் சேவையாற்ற இருக்கும் 525 மின்சாரப் பேருந்துகளும் தனியார் நிறுவனம் ஒன்றுக்குச் சொந்தமானவையாக இருக்கும். அந்தப் பேருந்துகளை அந்த நிறுவனமே நிர்வகித்து நடத்தும்.

இதில் மின்சாரப் பேருந்துகளுக்கும் அரசாங்கப் போக்குவரத்து கழகங்களுக்கும் எந்த நேரடித் தொடர்பும் இருக்காது.

மாநில அரசாங்கம் நேரடியாக அந்தப் பேருந்துகளை வாங்காது. பதிலாக அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கும் ஏலத்தில் வெற்றி பெரும் தனியார் நிறுவனத்துக்கும் இடையில் உடன்பாடு ஒன்று கையெழுத் தாகும் என்று வியாழக்கிழமை வெளியிடப்பட்ட ஏலக்குத்தகைப் பத்திரங்கள் தெரிவித்தன.

தமிழ்நாட்டின் முதல் மின்சாரப் பேருந்து சென்னையில் ஆகஸ்ட் மாதம் தொடங்கி வைக்கப்பட்டது. அதே மாதத்தில் மத்திய அரசாங்கம் தமிழ்நாட்டில் எட்டு நகர்களுக்கு 525 மின்சாரப் பேருந்துகளை வழங்கு வதாக அறிவித்தது.

கோயம்புத்தூர், சேலம், திருப்பூர், ஈரோடு, வேலூர், திருச்சி, விழுப்புரம், தஞ்சாவூர் ஆகிய நகர்களில் சேவையாற்ற இருக்கும் அந்த மின்சாரப் பேருந்துகளை வாங்கி அவற்றை இயக்குவதற்கான ஏலக்குத்தகை அறிவிப்பு செப்டம்பர் 24ஆம் தேதி வெளியிடப்பட்டது.

இந்த ஏற்பாட்டை வைத்துப் பார்க்கையில், மின்சாரப் பேருந்துகளை மாநில போக்குவரத்துக் கழகங்களின் பேருந்து ஓட்டுநர்கள் இயக்கமாட்டார்கள் என்பது தெரியவருகிறது. கட்டணத்தை பயணிகளிடம் இருந்து அரசாங்கக் கழகங்களே வசூலிக்கும். ஒவ்வொரு கி.மீட்ட ருக்கும் குறிப்பிட்ட தொகையை அந்தக் கழகங்கள் தனியார் நிறுவனத்துக்குக் கொடுக்கும்.