ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் பல இடங்களில் முதியவர்களை ஏமாற்றி அவர்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து சுமார் ரூ.230,000 பணத்தைச் சுருட்டிய புதுச்சட்டை கோபி என்ற ஆடவர் ஓருவரை போலிஸ் கைது செய்து விசாரித்து வருகிறது.
காரைக்குடியைச் சேர்ந்த கோபி என்ற அந்த நபர், தன்னை தன் காதலியிடம் பணக்காரர் போல் எப்போதுமே காட்டிக்கொள்ள ஆசைப்பட்டு புதுப்புதுச் சட்டைகளைப் போட்டுக்கொண்டு ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா ஏடிஎம் இயந்திரங்களில் முதியவர்களுக்கு உதவுவதுபோல் நடித்து அவர்களின் கணக்குகளில் இருந்து பணத்தைத் திருடிவிடுவார்.
ஸ்டேட் பேங்க் ஏடிஎம்மை பார்த்ததுமே அங்கேயே நின்றுகொண்டு யாராவது முதியவர்கள் வருகிறார்களா என்பதைப் பார்த்து காத்திருந்து தன்னிடம் சிக்கும் பெரியவர்களை அவர் ஏமாற்றிவிடுவார் என்று போலிசார் தெரிவித்தனர்.
பத்தாம் வகுப்பு வரை படித்திருக்கும் ஊதாரியான கோபி, அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணைக் கைபேசியில் மயக்கி காதலித்து அவரிடம் பணக்காரன் போல் நடித்து, பலரிடத்திலும் கடன் வாங்கி சொகுசு வாழ்க்கை நடத்தினார். கடன் கொடுத்தவர்கள் பணத்தைத் திருப்பி கேட்டபோது ஏடிஎம்களில் திருட்டு வேலைகளைத் தொடங்கினார்.
ஒவ்வொரு தடவையும் கூடினபட்சமாக தான் ரூ. 30,000க்கு மேல் திருடுவது கிடையாது என்று புதுச்சட்டை கோபி போலிசாரிடம் தெரிவித்து இருக்கிறார். கடைசியாக அந்த மோசடி பேர்வழி ராமநாதபுரத்தில் ஸ்டேட் பேங்க் ஏடிஎம் ஒன்றின் அருகே பிடிபட்டார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.
முதியவர்களுக்கு உதவி செய்து அவர்கள் ஏடிஎம்மில் இருந்து பணம் எடுத்ததும் அந்தப் பரிவர்த்தணையை ரத்து செய்ய வேண்டும் என்று சொல்லி மீண்டும் அட்டையை ஏடிஎம் இயந்திரத்தில் நுழைத்து அட்டையை எடுத்து முதியவரிடம் கொடுத்து அனுப்பிவிட்டு பிறகு பணத்தை கோபி திருடத் தொடங்குவார் என்று போலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

