சென்னை: நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் தங்களை ஆதரிக்க பாஜக விதித்த நிபந்தனைகள் அதிமுகவை அதிரவைத்திருக்கிறதாம். உள்ளாட்சித் தேர்தலில் 5 மேயர் பதவிகள், 35% இடங்கள் ஒதுக்கினால்தான் கூட்டணி தொடரும் என கறார் காட்டியதாம் பாஜக. இடைத்தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படுவதற்கு முன்னரே நாங்குநேரிக்கு குறிவைத்தது பாஜக. அங்கு பொன்.ராதாகிருஷ்ணன் அல்லது நயினார் நாகேந்திரன் போட்டியிடக்கூடும் என தகவல்கள் வெளியாகின.
ஆனால் அதிமுக இதை சட்டை செய்யாமல் 2 தொகுதிகளிலும் வேட்பாளர்களை அதிரடியாக அறிவித்தது. இதனால் இடைத்தேர்தல்களில் அதிமுக-பாஜக கூட்டணி குறித்து கேள்வி எழுந்தது. மேலும் தேமுதிக, பாமக உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்களை அதிமுக குழு நேரில் சந்தித்து ஆதரவும் கேட்டது. ஆனால் பாஜக தலைவர்களை அதிமுக குழு சந்திக்கவில்லை. இதனால் அதிமுக-பாஜக கூட்டணியில் விரிசலா என்கிற பேச்சும் அடிபட்டது.
இதனிடையே திடீரென நேற்று பாஜக தலைமையகம் சென்று அக்கட்சித் தலைவர்களைச் சந்தித்து ஆதரவு கேட்டிருக்கிறார் அமைச்சர் ஜெயக்குமார். பாஜகவும் ஆதரவு தருவதாக அறிவித்திருக்கிறது. இது தொடர்பாக பாஜக வட்டாரங்களில் சில தகவல்கள் கசிந்தன.
உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக எவ்வளவு இடம் தரும் என்பதை பொறுத்துத்தான் இடைத்தேர்தலில் ஆதரவு என பாஜக கூறி விட்டதாம். பாஜகவுக்கு சென்னை உள்ளிட்ட 5 மேயர் தொகுதிகளோடு மொத்த உள்ளாட்சித் தேர்தல் இடங்களில் 35% பாஜகவுக்கு ஒதுக்கவேண்டும் என அதிமுகவிடம் பேரம் நடந்ததாகவும் அதன் பின்னரே இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு என பாஜக அறிவித்ததாகவும் கூறப்படுகிறது.

