மேட்டூர்: நிதிப்பிரச்சினை காரணமாகவும் தனது குடும்பத்தை வாட்டும் வறுமை காரணமாகவும் தன்னால் மேன்மேலும் சாதிக்கமுடி யாமல் சிரமப்படுவதாகக் கூறி நிதி உதவி கேட்டுள்ளார் 'பிளஸ் டூ' படிக்கும் மாணவி ஒருவர்.
தேசிய மற்றும் மாநில நீச்சல் போட்டிகளில் இதுவரை 280 பதக்கங்களைக் குவித்துள்ள நீச்சல் வீராங்கனையான ஜாஸ்ரீ, அனைத்துலகப் போட்டிகளில் பங்கேற்க தனக்கு நிதி உதவி வழங்குமாறு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் மனு அளித்துள்ளார்.
திருச்சி காஜாமலையைச் சேர்ந்த ஜானகிராமன், லட்சுமிகாந்தத்தின் ஒரே மகள் ஜாஸ்ரீ, 17.
இப்போது 'பிளஸ் டூ' படித்து வரும் ஜாஸ்ரீ, தனது மூன்று வயது முதலே நீச்சல் பயிற்சி பெற்றவர். தொடக்கப்பள்ளி முதல் இதுவரை மாவட்ட, மாநில, தேசிய அளவில் 280 பதக்கங்கள் குவித்துள்ளார்.
அடுத்த மாதம் 23ஆம் தேதி அமெரிக்காவில் நடக்கும் அனைத்துலகப் போட்டிக்குத் தேர்வு பெற்றுள்ள ஜாஸ்ரீ, அங்கு செல்வதற்கு நிதி வசதி கோரி சேலம் மாவட்டம், மேட்டூரில் நடந்த மக்கள் குறைதீர்ப்பு முகாமில் முதல்வரிடம் மனு கொடுத்தார்.
இதுகுறித்து ஜாஸ்ரீ கூறுகையில், "என் தந்தை திருச்சியில் நகல் எடுக்கும் கடை வைத்துள்ளார். ஏற்கெனவே நான் நீச்சல் போட்டிகளில் பங்கேற்க அவர் நிறைய செலவு செய்துவிட்டார். அமெரிக்காவில் நடக்க உள்ள அனைத்துலக 'மாடர்ன் பென்டத்லான்' போட்டியில் பங்கேற்க தமிழகத்திலிருந்து எட்டு பேர் உள்பட நாடு முழுவதும் 30 பேர் தேர்வாகி உள்ளோம்.
"இந்தப் போட்டியில் சாதிப்பதற்கு கடும் பயிற்சி பெற்று வருகிறேன். ஆனால், வெளிநாடு செல்வதற்கு போதிய நிதி வசதி இல்லாததால் முதல்வர் பழனிசாமியிடம் நிதி உதவி கேட்டு மனு தந்துள்ளேன். அவரும் நடவடிக்கை எடுப்பதாகக் கூறியுள்ளார். அனைத்துலக அளவில் சாதிக்கவேண்டும் என்பதே என் லட்சியம்," என்று தெரிவித்தார்.

