பல கோடி ரூபாய் மதிப்பிலான இரு ஐம்பொன் சிலைகள் மீட்பு

பல கோடி ரூபாய் மதிப்பிலான இரு ஐம்பொன் சிலைகள் மீட்பு

2 mins read
4f8c582c-15d2-4dd6-83e7-f437480ee722
தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவின் புலன் விசாரணைக் குழுத் தலைவர் ஏ.ஜி. பொன்மாணிக்கவேல், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் உள்ளிட்ட குழுவினர் தஞ்சை கலைக்கூடத்தில் இருந்து மீட்கப்பட்ட சிலைகளுடன் உள்ளனர். படம்: ஊடகம் -

தஞ்சாவூர்: தஞ்சை பெரிய கோயி லில் இருந்து காணாமல் போன பல கோடி ரூபாய் மதிப்பிலான இரு ஐம்பொன் சிலைகள் தஞ்சாவூர் கலைக்கூடத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரி பொன் மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் பெரிய கோயிலை; கட்டிய ராஜராஜ சோழனின் மனைவி பஞ்சவன் மாதேவியால் தஞ்சை பெரியகோவிலுக்கு வீணாதர தட்சிணாமூர்த்தி எனும் தஞ்சை அழகர், திரிபுராந்தகர் ஆகிய இரண்டு ஐம்பொன் சிவன் சிலைகள் வழங்கப்பட்டதாக கல்வெட்டு குறிப்புகள் உள்ளன.

அதன்பின்னர் காணாமல் போன இந்தச் சிலைகள் பின்னாளில் மீட்கப்பட்டு, தஞ்சாவூர் ராஜகோபாலசுவாமி கோயிலுக்கு வந்தன.

இதைத்தொடர்ந்து தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் உள்ள கலைக்கூடத்திலும் வைக்கப்பட்டன.

இக்கலைக் கூடத்தில் இருந்த அருங்காட்சியக காப்பாளர் சிவக்குமாரிடம் இந்த இரு சிலைகளும் தஞ்சாவூர் பெரிய கோயிலுக்குச் சொந்தமானவை என்றும் பூஜிக்கப்பட்டு வணங்கக்கூடிய தெய்வச் சிலைகளை அருங்காட்சியகத்தில் வைக்கக்கூடாது எனவும் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலிசார் கூறினர்.

இதையடுத்து போலிசார் இரு சிலைகளையும் திருச்சி சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் அலுவலகத்துக்கு எடுத்துச்சென்றனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பொன் மாணிக்கவேல் கூறுகை யில், "தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு ராஜராஜ சோழனின் ஆட்சிக்காலத்தில் 66 தெய்வச் சிலைகள் செய்து ஏராளமான ஆபரணங்களுடன் வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கோயில் கல்வெட்டுகளிலும் விவரம் பொறிக்கப்பட்டுள்ளது.

"தற்போது தஞ்சாவூர் கலைக்கூடத்தில் இருந்த இரு சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. இதில் தஞ்சை அழகர் என்ற சிவன் சிலை 60 கிலோ எடையும் திரிபுராந்தகர் சிலை 56 கிலோ எடையும் உடையவை. இவை பல கோடி ரூபாய் மதிப்புடையவை.

"தஞ்சை பெரியகோயிலில் இருந்த இரு சிலைகளும் 69 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனது. இச்சிலைகள் நீதிமன்றம் மூலமாக மீண்டும் தஞ்சாவூர் பெரியகோயிலில் ஒப்படைக்கப்படும்," என்று தெரிவித்தார்.