கிருஷ்ணகிரி: 'செல்ஃபி' படம் எடுக்கும் ஆர்வத்தில் புதுமணப் பெண் உட்பட நான்கு பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் கிருஷ்ணகிரி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இச்சம்பவம் ஊத்தங்கரை அருகே உள்ள பாம்பாறு அணைப் பகுதியில் நேற்று முன்தினம் நிகழ்ந்துள்ளது.
அப்பகுதியைச் சேர்ந்த பிரபு, நிவேதா தம்பதியர்க்கு அண்மையில்தான் திருமணமானது. ஊத்தங் கரையில் உள்ள தனியார் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்துவரும் சந்தோஷ், தனியார் கல்லூரியில் படித்து வரும் சுனிதா, சினேகா, யுவராணி ஆகிய மூவரும் இத்தம்பதியரின் உறவினர்கள் ஆவர்.
நேற்று முன்தினம் இம்மூவரும் புதுமணத் தம்பதியருடன் பாம்பாறு அணையைச் சுற்றிப் பார்க்கச் சென்றனர். அப்போது அணையில் தண்ணீர் வரத்து அதிகமாக இருந்தது.
இதைக் கண்டு உற்சாகமடைந்த 5 பேரும் தண்ணீரில் இறங்கி நின்றபடி செல்ஃபி எடுக்க முனைந்தனர். புதுமணப் பெண்ணும் மற்ற மூவரும் தண்ணீரில் நின்றுகொண்டிருக்க, பிரபு கரையோரம் நின்றபடி தனது கைபேசியில் படமெடுத்துள்ளார்.
அப்போது தண்ணீரின் மேல் நின்று கொண்டிருந்த 4 பேரும் எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கி உயிருக்குப் போராடினர். இதைக் கண்ட பிரபு செய்வது அறியாது திகைத்து நின்றார்.
பின்னர், சுதாரித்துக்கொண்ட அவர், தண்ணீரில் குதித்து யுவராணியை மட்டும் போராடி கரை சேர்த்தார். அதற்குள் பிரபுவின் மனைவி உட்பட மற்ற நால்வரும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.
இதைக்கண்டு பிரபுவும் யுவராணியும் கண்ணீர் விட்டுக் கதறி அழுதனர். அச்சமயம் அணைப் பகுதியில் யாரும் இல்லாததால் இவர்களுக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை.
இதையடுத்து தீயணைப்பு வீரர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து நீரில் மூழ்கிய புதுமணப் பெண் நிவேதா உள்ளிட்ட 4 பேரையும் சடலமாக மீட்டெடுத்தனர். இதனால் அப்பகுதியில் சோகம் நிலவுகிறது.

