திண்டுக்கல்: பிரசவத்துக்காக அழைத்துச் செல்லப்பட்ட கர்ப் பிணிப் பெண்ணுக்கு ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே குழந்தை பிறந்தது.
இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் திண்டுக்கல் மாவட்டம் செந்துறை பகுதியில் நிகழ்ந்துள்ளது.
அங்குள்ள கக்கன் காலனியில் வசித்து வரும் கூலித் தொழிலாளியான முருகேசனின் மனைவி புவனேஸ்வரி, நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.
இத்தம்பதியருக்கு ஏற்கெனவே ஓர் ஆண், ஒரு பெண் என இரு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் 27 வயதான புவனேஸ்வரி மீண்டும் தாய்மை அடைந்தார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு நேற்று முன்தினம் பிரசவ வலி ஏற்பட்டது.
இதையடுத்து அவரை ஆம்புலன்ஸ் வாகனத்தில் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். எனினும் பாதி வழியிலேயே அவருக்கு பிரசவ வலி அதிகமானது.
இதையடுத்து ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அவருக்குத் தேவையான முதலுதவியை அளித்தனர்.
இந்நிலையில் புவனேஸ்வரிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.
இதன் பின்னர் தாயையும் சேயையும் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பத்திரமாக மருத்துவமனைக்குக் கொண்டு சேர்த்தனர்.
அங்கு குழந்தையையும் தாயையும் பரிசோதித்த மருத்துவர்கள் இருவரும் நலமாக இருப்பதாக தெரிவித்தனர்.
ஆம்புலன்ஸ் ஊழியர்களைப் பொதுமக்கள் பாராட்டினர்.

