சென்னையில் 374 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

சென்னையில் 374 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

1 mins read

சென்னை: சென்னை மாநகராட்சிப் பகுதியில் தடை செய்யப்பட்ட ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் 374 டன் நெகிழிப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதனை வைத்திருந்ததற்காக மொத்தம் ரூ. 67.68 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழலைக் காக்கும் வகையில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் 14 வகையான நெகிழிப் பொருட்களின் விற்பனை, பயன் பாட்டுக்கு கடந்த ஜனவரி 1ஆம் தேதி முதல் தமிழக அரசு தடை விதித்தது.

இதையடுத்து பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட 15 மண்டலங்களில் சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.

கடந்த ஜனவரி மாதம் 1ஆம் தேதியில் இருந்து செப்டம்பர் 30ஆம் தேதி வரை 15 மண்டலங்களில் உள்ள 2 லட்சத்து 95 ஆயிரம் கடைகள், நிறுவனங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் தடை செய்யப்பட்ட 306 டன் நெகிழிப் பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டு அவை பறிமுதல் செய்யப்பட்டன.

இதற்காக அந்நிறுவனங்களுக்கு ரூ. 63 லட்சத்து 14 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, கடந்த வெள்ளிக்கிழமை 15 மண்டலங்களில் உள்ள வணிக வளாகங்கள், கடைகள், உணவகங்கள் ஆகியவற்றில் நடத்தப்பட்ட சோதனையில் தடை செய்யப்பட்ட 680 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

அவர்களுக்கு ரூ. 4 லட்சத்து 54,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.