நெல்லை: தமிழக மக்கள் தங்களுக்குத் தலைமை தாங்கி வழிநடத்தக்கூடிய தலைவரை தரையில்தான் தேட வேண்டும். திரையில் தேடக்கூடாது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பொதுமக்களை வலியுறுத்தி கேட்டுக்கொண்டு இருக்கிறார்.
இடைத்தேர்தல் நடக்கவிருக்கும் நாங்குநேரி தொகுதியில் போட்டியிடும் தன் கட்சி வேட்பாளர் கந்தசாமியை ஆதரித்து மக்களிடையே பிரசாரம் செய்த சீமான், திரைப்பட நடிகர்களை நம்பி அவர்கள் காட்டும் வழியில் செல்லக்கூடிய மக்கள் அதிகமாக உள்ள மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது என்று வேதனை தெரிவித்தார்.
ஜெயலலிதாவுக்குப் பிறகு அரசியல் பக்கம் திரும்பி இருக்கும் கமல்ஹாசன், ரஜினிகாந்த் போன்ற திரைப்பட நடிகர்களை சீமான் கடுமையாகச் சாடி வருகிறார்.
குறிப்பாக ரஜினிகாந்த் தமிழகத்தின் முதல்வராக வருவதற்கு விருப்பப்படக்கூடாது என்று அவர் வலியுறுத்திக் கூறி வருகிறார்.
"தமிழ்நாட்டில் இப்போது பண அரசியல் நடக்கிறது. இதற்கு எதிராக நிச்சயம் ஒரு மாற்றம் வந்தே தீரும். மக்கள் தாங்களாகவே புரட்சி செய்யப்போகிறார்கள்.
"தேர்தலுக்கு யார் காரணமோ அவர்களிடம் இருந்து தேர்தலுக்கான தொகையைத் தேர்தல் ஆணையம் வசூலிக்கவேண்டிய ஒரு நிலை இருக்க வேண்டும்.
"இந்தியாவின் எந்தவொரு மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு நடிகர்களை நம்பும் மக்கள் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். இந்த நிலை மாறவேண்டும். தங்களுக்கு உரிய தலைவர்களை அவர்கள் களத்தில்தான் கண்டுபிடிக்க வேண்டும். அதைவிட்டு திரைப்படத் துறை பக்கம் அவர்கள் சாயக்கூடாது," என்று சீமான் வலியுறுத்தினார்.

