பெரம்பலுார்: தமிழ்நாட்டில் கீழடி ஆய்வு பரபரப்பாகி வரும் நிலையில், 1,000 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பழைய வரலாற்று வளம் என்று நம்பப்படும் ரஞ்சன்குடி கோட்டையைப் புதுப்பித்து பாதுகாக்க வேண்டும் என்று வரலாற்று ஆய்வாளர்கள் மத்திய, மாநில அரசுகளைக் கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.
திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பெரம்பலூரில் இருந்து 18 கி.மீட்டர் தொலைவில் இருக்கும் மங்கலமேடு என்ற குக்கிராமம் அருகே கட்டப்பட்ட ரஞ்சன்குடி கோட்டை 1,000 ஆண்டுகள் பழமையானது என்று கூறப்படுகிறது.
இந்தக் கோட்டை பற்றிய முழுமையான வரலாறு இன்னமும் கிடைக்கவில்லை. கோட்டை மலைக்குன்றின் மேல் அமைந்துள்ளது. அது வேலூர் கோட்டையைப் போன்று காணப்படுகிறது.
கோட்டையைச் சுற்றிலும் அகழி இருக்கிறது. 44 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டு உள்ள கோட்டைச் சுவர்களில் பல சின்னங்கள் காணப்படுகின்றன.
சிவபெருமான் உருவம், நீச்சல் குளம், ஆயுதக் கிடங்கு, சுரங்கப்பாதை பலவற்றோடும் இந்தக் கோட்டை வியப்பூட்டுகிறது.
கோட்டையின் உட்புறம் இந்துக் கடவுள்களின் வழிபாட்டுச் சிலைகள் உள்ளன. அருகே மசூதி ஒன்றும் காணப்படுகிறது. இந்தக் கோட்டையைச் சேர்ந்த வரலாற்று நாணயங்களும் பீரங்கிக் குண்டுகளும் கண்டெடுக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் கோட்டை, இப்போது சமூக விரோத காரியங்களுக்குப் பயன்படுத்தப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
இந்தக் கோட்டை வேகமாக சிதிலம் அடைந்து வருகிறது என்றும் இதைப் புதுப்பித்து வரலாற்றைக் கட்டிக்காக்க உடனடியாக மத்திய, மாநில அரசுகள் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்றும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
ரஞ்சன்குடி கோட்டையை மீட்கக்கோரி தஞ்சாவூரில் ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடந்தது. கோட்டையைக் கட்டி 350 ஆண்டுகள் நல்லாட்சி புரிந்த பெரும்பிடுகு முத்தரையர் பரம்பரை வரலாற்றை உலகறியச் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல தீர்மானங்களும் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

