தனி ஒருவராக பாடுபட்டு 5,000 கழிவறைகளைக் கட்டிய செல்வி

தனி ஒருவராக பாடுபட்டு 5,000 கழிவறைகளைக் கட்டிய செல்வி

1 mins read
56565638-3a1b-48fe-8436-a5f78ce71528
-

மதுரை: மத்திய அரசாங்கத்தின் 'தூய்மை இந்தியா' திட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு மதுரை ஊராட்சியில் தனி ஒருவராகக் களம் இறங்கி 5,000க்கும் மேற்பட்ட கழிவறைகளைக் கட்டித் தந்திருக்கும் மதுரை மாவட்டம் திருமங்கலம் தற்காலிக வட்டார ஒருங்கிணைப்பாளர் செல்வி, 36, தேசிய விருதைப் பெற்றுள்ளார்.

திருமதி செல்வி, தான் வசித்த சக்கிமங்கலத்தை மாதிரி ஊராட்சியாக உலகுக்குக் காட்டி பெரும் பாராட்டைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிளஸ்1 வரை படித்த செல்வி, தன்னுடைய கிராமத்தில் பெண்களும் மாணவிகளும் கழிவறைகள் இல்லாமல் பட்ட சிரமங்களை உணர்ந்து மத்திய அரசாங்கத்தின் திட்டத்தை வீடு வீடாக விளம்பரப்படுத்தினார்.

வீட்டில் கழிவறை கட்டினால் ரூ. 12,000 மானியம் கிடைக்கும் என்று இவர் அறிவித்ததைக் கேட்டு பல குடும்பத்தினரும் கழிவறைகளைக் கட்டினர்.

இதனால் ஊக்கமடைந்த திருமதி செல்வி, பிற ஊராட்சிகளிலும் உள்ள சமூக தொண்டர்களுக்குப் பயிற்சி அளித்து பல இடங்களிலும் கழிவறைகளைக் கட்ட ஊக்கமூட்டினார்.

இந்தச் சமூகத் தொண்டிற்காக தேசிய விருது பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரே பெண் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

மணமான திருமதி செல்விக்கு மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள். தன்னுடைய பொதுத் தொண்டிற்குத் தன் கணவர் பெரும் ஊக்கமளித்து வருவதாகக் கூறும் திருமதி செல்வி, மரக்கன்று நடுதல், மக்கும் குப்பையில் இருந்து மண்புழு உரம் தயாரித்தல் போன்ற இதர பல காரியங்களையும் கிராம மக்களிடையே பிரபலப்படுத்தி வெற்றி பெற்று இருக்கிறார்.