வெள்ளத்தில் சிக்கிய 51 பேர் மீட்பு

வெள்ளத்தில் சிக்கிய 51 பேர் மீட்பு

1 mins read

மேட்டுப்பாளையம்: பத்திரகாளியம்மன் ஆலயம் அமைந்துள்ள பவானி ஆற்றங்கரையில் சமைத்து உண்பது இந்த ஆலயத்துக்கு வரும் பக்தர்களின் வழக்கம்.

இப்படி சமைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது திடீரென்று ஏற்பட்ட ஆற்று வெள்ளப்பெருக்கில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் சிக்கித் தத்தளித்தனர்.

இதுகுறித்து மீட்புத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து வெள்ளப்பெருக்கில் சிக்கிய 51 சுற்றுலாப் பயணிகளை 4 மணி நேரப் போராட்டத்துக்கு பின் போலிசாரும் தீயணைப்பு வீரர்களும் பரிசலின் உதவியுடன் மீட்டனர்.

பெரும் அசம்பாவிதம் நடக்க விருந்த நிலையில் அதனைத் தடுத்து அனைவரையும் பத்திரமாக காப்பாற்றிய மீட்புத்துறையினருக்கு பொதுமக்களும் பக்தர்களும் நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே பில்லூர் அணை உள்ளது. இந்த அணை நீரை ஆதாரமாகக் கொண்டு பவானி ஆறு ஓடுகிறது. இந்த பவானி ஆற்றை ஒட்டி பிரசித்திபெற்ற வன பத்ரகாளியம்மன் கோவிலும் உள்ளது. இந்தக் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து இருந்தனர்.

அப்போது பவானி ஆற்றில் குறைந்த அளவே தண்ணீர் ஓடிக்கொண்டு இருந்ததால் ஆற்றில் குளித்துக்கொண்டு இருந்தனர். குடும்பத்துடன் வந்தவர்கள் நடுத்திட்டில் சமையல் செய்தும் ஓய்வு எடுத்துக்கொண்டும் இருந்தனர்.

இந்நிலையில் திடீரென பில்லூர் அணையில் இருந்து மின் உற்பத்திக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.